Published : 25 May 2022 07:06 AM
Last Updated : 25 May 2022 07:06 AM
கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன.
டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணி லீக்சுற்றில் 16 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்திருந்தது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி தோல்வியடைந்ததன் காரணமாகவே பெங்களூருக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்திருந்தது. குஜராத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் வலுவை கொடுத்துள்ளது.
டு பிளெஸ்ஸிஸ், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், மகிபால் ராம்ரோர், ரஜத் பட்டிதார் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். பந்து வீச்சில் மொகமது சிராஜ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ஜோஸ் ஹேசல்வுட், வானிடு ஹசரங்கா, ஹர்சால் படேல் கூட்டணி அசத்தி வருகிறது. இந்த மூவர் கூட்டணி இந்த சீசனில் 57 விக்கெட்களை வேட்டையாடி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இவர்கள், லக்னோ அணிக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
லக்னோ அணி 18 புள்ளிகள் குவித்து லீக் சுற்றில் 3-வது இடம் பிடித்திருந்தது. அந்த அணியின் பேட்டிங் பெரும்பாலும் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் குயிண்டன் டி காக்கை சார்ந்தே இருக்கிறது. இந்த சீசனில் இவர்கள் கூட்டாக 1,039 ரன்களை வேட்டையாடி உள்ளனர்.
குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக 210 ரன்கள் குவித்து சாதனை நிகழ்த்தியிருந்தனர்.
லக்னோ அணிக்கு இதுவே பலவீனமாகவும் அமைந்துள்ளது. நடுவரிசை, பின்வரிசை பேட்டிங் தரமானதாக இல்லை. 4 அரை சதங்கள் அடித்துள்ள தீபக் ஹூடா மட்டும் நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். மார்கஸ் ஸ்டாயினிஸ், கிருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர் ஆகியோர் ஒருசில ஆட்டங்களில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினார்களே தவிர மற்ற ஆட்டங்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர்கள் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் பெங்களூரு அணிக்கு சவால் அளிக்கலாம்.
இளம் வேகங்கள்
பந்து வீச்சை பொறுத்தவரையில் இளம் வேகங்களான அவேஷ் கான், மோஷின் கான் கூட்டணி பெங்களூரு பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 27-ம் தேதி நடைபெறும் தகுதி சுற்று 2-க்கு முன்னேறும். இந்த தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT