

ஐதராபாத் அணி முதல்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. அந்த அணி பட்டம் வென்றதில் வார்னரின் பங்கு அதிகம் உள்ளது. கேப்டனாக அவர் அணியை எல்லா வகையிலும் முன்னின்று வழி நடத்தினார்.
பெரும்பாலான ஆட்டங்களில் அவர் தனிநபராகவே களத்தில் போராடி வெற்றி தேடிக்கொடுத்தார். இந்த தொடரில் அவர் 848 ரன்கள் குவித்தார். இதில் பாதிக்கு மேல் இலக்கை நோக்கி துரத்திய ஆட்டங்களில் வந்தவை. வார்னர் இல்லையென்றால் ஐதராபாத் அணி இறுதிப்போட்டியில் கால்பதித்திருக்காது. இறுதிப்போட்டியில் வார்னர் 38 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.
மற்ற அணிகள் சுழற்பந்து வீச்சை ஆயுதமாக பயன்டுத்திய நிலையில் புவனேஷ்வர் குமார், முஸ்தாபிஜுர் ரஹ்மான், ஆஷிஸ் நெஹ்ரா, பரிந்தர் ஸரன், ஹன்ரிக்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியே எதிரணிகளை துவம்சம் செய்தார் வார்னர். அவரின் அசாத்திய திறமையால் தான் ஐதராபாத் முதல் முறை பட்டம் வென்றுள்ளது.