

மும்பை: “புஜாரா இந்திய அணிக்கு திரும்பியதை நம்ப முடியவில்லை” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைத் தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஆடும் லெவனில் கடந்த 2010 முதல் தவறாமல் இடம்பிடித்து வருபவர் புஜாரா. அவரது பேட்டிங் திறன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏதுவான வகையில் இருப்பதுதான் இதற்கு காரணம். நின்று நிதானமாக விளையாடுபவர். இந்திய அணிக்காக 162 டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி 6713 ரன்கள் எடுத்துள்ளார். 18 சதங்களும், 32 அரை சதங்களும் இதில் அடங்கும். கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 9 இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ளார்.
அதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 34 வயதான அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது சவாலாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கவுன்டி கிரிக்கெட் தொடரில் சசெக்ஸ் அணிக்காக வரிசையாக நான்கு சதங்களை பதிவு செய்தார். அதன் பலனாக இப்போது அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார்.
"புஜாரா அணிக்கு திரும்பியதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த கம்பேக் கிரிக்கெட் மீது அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் வெளிப்பாடு. இதுவொரு அற்புதமான கதை. கவுன்டி கிரிக்கெட்டில் அவர் ஆடிய ஆட்டம்தான் இந்த அணிக்குள் அவர் கம்பேக் கொடுக்க பிரதான காரணம். அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அணியில் விளையாடுவது உறுதியாகி விடும்" என தெரிவித்துள்ளார் எம்.எஸ்.கே.பிரசாத்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை வாக்கில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்த அணியில் தான் புஜாரா தேர்வாகியுள்ளார்.