

நடப்பு ஐபிஎல் சீசனில் தனது அதிரடி ஃபினிஷிங் திறன் மூலம் இந்திய அணியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக். செல்லமாக 'டிகே' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஃபினிஷராக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவருக்கு கொஞ்சம் பழக்கப்பட்ட ரோல்தான் என இதனைச் சொல்லலாம். இதற்கு முன்னர் கடந்த 2018 வாக்கில் சில போட்டிகளின் முடிவை இந்திய அணிக்கு சாதகமாக தனது அபார பேட்டிங் திறன் மூலம் அற்புதமாக முடித்துக் கொடுத்தவர்.
கங்குலி டூ கே.எல்.ராகுல் வரை: எத்தனை கேப்டன்கள்... - கங்குலி தொடங்கி டிராவிட், கும்ப்ளே, தோனி, கோலி, ரோகித், இப்போது கே.எல்.ராகுல் வரையில் பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் தினேஷ் கார்த்திக். நட்சத்திர வீரர்களுக்கு மத்தியில் சிக்கித்தவித்த அவருக்கு இந்திய அணியில் ரெகுலராக இடம் கிடைப்பதே பெரிய சவாலாக இருந்தது.
இருந்தாலும் மனம் தளராது அணியில் விளையாடும் வாய்ப்புக்காக முயற்சித்துக் கொண்டே இருந்தார். அதற்காக தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது திறனை நிரூபித்து வந்தார். அது உள்ளூர் கிரிக்கெட், உலக கிரிக்கெட் என அவர் வேறுபாடு பார்க்கவில்லை. பல்வேறு பேட்டிங் ஆர்டரில் விளையாடியவர். இப்போது ஃபினிஷர் ரோலுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 வயதில் தொடங்கிய கிரிக்கெட் பயணம்: சென்னையில் பிறந்த தினேஷ் கார்த்திக். பத்து வயதில் தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியவர். தமிழ்நாடு மாநில கிரிக்கெட் அணியில் தனக்கென நிலையான இடத்தை பிடித்தார். 2004-இல் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். ரெய்னா, தவான், ராயுடு எல்லாம் அவருடன் ஜூனியர் கிரிக்கெட்டில் விளையாடியவர்கள்தான்.
பின்னர் கங்குலி தலைமையிலான இந்திய சீனியர் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடித்தார். சச்சின், கங்குலி, சேவாக், டிராவிட், யுவராஜ், முகமது கைஃப் என அப்போதைய இந்திய அணி வீரர்களோடு டிரெஸ்சிங் ரூமை பகிர்ந்து கொண்டார் டிகே. இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் தொடக்கம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. அவருக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியை தேர்வு செய்தார் கங்குலி. தனக்கு கிடைத்த வாய்ப்பை தோனி சரியாக பயன்படுத்திக் கொள்ள வெயிட்டிங் லிடில் உட்கார வைக்கப்பட்டார் டிகே.
கம்பேக் கொடுக்கும் கலையில் கைதேர்ந்தவர்: 'இனி அவரது கரியர் அவ்வளவு தான்' என விமர்சகர்கள் விமர்சிக்க அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அணியில் தனக்கு இடம் கிடைக்காத போதெல்லாம் உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து தேர்வு குழுவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, மீண்டும் அணிக்குள் கம்பேக் கொடுக்கும் கலையில் தன்னை கைதேர்ந்தவராக மாற்றிக் கொண்டார். இந்திய கிரிக்கெட் அணியில் தினேஷ் கார்த்திக் போல தளராது கம்பேக் கொடுத்துக் கொண்டே இருக்கும் வீரர்கள் யாரும் இல்லை என்றும் சொல்லலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2017 தென்னாபிரிக்க பயணம், 2018 நிதாஸ் டிராபி, 2019 உலகக் கோப்பை என அவர் கம்பேக் கொடுத்துள்ளார். இப்போது 2022-இல் மீண்டும் ஒரு கம்பேக். இடையில் தனது குடும்ப வாழ்க்கையிலும் சவால்களை எதிர்கொண்டவர். இருந்தாலும் தனது கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை மனம் தளராத முயற்சியினால் மீட்டெடுத்தவர்.
இப்படியாக இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 32 டி20 மற்றும் 94 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தம் 3176 ரன்கள் சேர்த்துள்ளார். கடைசியாக கடந்த 2019-இல் விளையாடி இருந்தார். அதன் பிறகு இளம் வீரர்களின் வரவால் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 36 வயதான அவர் கடந்த ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வர்ணனையாளராகவும் பணியாற்றினார்.
ஐபிஎல் 2022: ஃபினிஷர் அவதாரம்: நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 287 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 191.33. இப்போது இந்த அதிரடி ஃபார்ம் காரணமாகவே அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடின உழைப்பு தொடரும்: தனது ரீ-என்ட்ரி குறித்து ட்வீட் செய்துள்ளார் தினேஷ் கார்த்திக். "உங்களை நீங்கள் நம்பினால். அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்" என ட்வீட் செய்துள்ளார்.
தனக்கென பெரிய அளவில் ரசிகர் வட்டம் எல்லாம் கொண்டிருப்பவர் அல்ல. கிரிக்கெட் புக்கில் உள்ள அத்தனை ஷாட்களையும் கச்சிதாமாக ஆடும் அவரது திறனை மீண்டும் இந்திய அணிக்காக நிகழ்த்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.