Published : 06 May 2016 01:03 PM
Last Updated : 06 May 2016 01:03 PM

ஜாகீர் கான் இல்லாத டெல்லி அணியை வீழ்த்தியது புனே

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, டெல்லி டேர் டெவில்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுக்க புனே அணி இலக்கை விரட்டி 166/3 என்று வெற்றி பெற்றது.

இவ்வகைப் போட்டிகளெல்லாம் ஐபிஎல் தொடருக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போட்டி, இதன் தர்க்கம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான பிரத்யேக தர்க்கம். ஜாகீர் கான், குவிண்டன் டி காக் இல்லை. டெல்லி அணிக்கு கேப்டன் டுமினி. டெல்லி அணி வெற்றி பெறுவதற்காக ஆடியது போல் தெரியவில்லை. தோனி அணியை அவ்வளவு எளிதாக வெளியேற்றிவிட்டால் ஐபிஎல் ‘மாடல்’ என்பதே கேள்விக்குறியாகிவிடுமே?

அமித் மிஸ்ரா நோ-பால் வீசுகிறார் அதுவும் மிகப்பெரிய நோ-பால், அடுத்த பந்தே நெஞ்சுயர புல்டாஸ் வீசுகிறார். மொகமது ஷமி படுமோசமாக வீசி 3.1 ஓவர்களில் 50 ரன்கள் கொடுக்கிறார். அதுவும் 18-வது ஓவரில் ஷமி வீசிய வைடுக்காகவே அவரை 6 வாரங்கள் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்ய வேண்டும். லெக் ஸ்டம்பிலிருந்து அரை கி.மீ. தள்ளி ஒரு பந்தை வீசுகிறார் இந்திய அணியின் முன்னணி பவுலர். அது 5 வைடாக மாறியது. டுமினி கடைசி நேரத்தில் பவன் நெகியை பந்து வீச அழைக்கிறார். இவையெல்லாம்தான் ஐபிஎல் கிரிக்கெட்டின் பிரத்யேக குணாம்சங்கள்.

இம்ரான் தாஹிர், அமித் மிஸ்ராவின் நுட்பமான பந்து வீச்சினால் கடைசி 3 ஓவர்களில் 37 ரன்கள் என்று புனே அணிக்குத் தேவையாக இருந்த போது இருதரப்பிற்கும் வெற்றி சாத்தியமாக இருந்தது. அப்போதுதான் மொகமது ஷமி ஆட்டத்தின் 18-வது ஓவரில் மோசமான 5 வைடுகளுடன் தோனிக்கு எங்கு பந்து வீசக்கூடாதோ அங்கு வீசினார். அவரும் ஒரு பவுண்டரி ஒரு நேர் சிக்ஸ் அடித்தார். இதனால் 3 ஓவர்கள் 37 ரன்கள் என்ற சமன்பாடு ஷமியின் கைங்கர்யத்தினால் 12 பந்துகளில் 17 ரன்கள் என்று ஆனது.

19-வது ஓவரின் முதல் பந்தில் 27 ரன்கள் எடுத்த தோனி இம்ரான் தாஹிர் பந்தை தூக்கி அடித்து பவுண்டரி அருகே சாம் பில்லிங்ஸின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார். ஆனால் திசர பெரேரா இறங்கி 2 மிகப்பெரிய சிக்சர்களை விளாச கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஹானே பிளிக்கில் பவுண்டரி அடித்து முடித்து வைத்தார். ரஹானே 48 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார், திசர பெரேரா 5 பந்துகளில் 14 நாட் அவுட். முன்னதாக உஸ்மான் கவாஜா 8 ரன்களில் கொடுத்த கேட்ச் வாய்ப்பு தவறவிடப்பட 27 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து மிஸ்ரா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். சவுரவ் திவாரி 21 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிரிடம் வீழ்ந்தார்.

டெல்லி அணியில் ஜெயந்த் யாதவ் விக்கெட் எடுக்காவிட்டாலும் சிக்கனமாக வீசினார், இம்ரான் தாஹிர், அமித் மிஸ்ரா முறையே 2 மற்றும் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முன்னதாக புனே அணி வேகப்பந்து வீச்சாளர் டிண்டா, டெல்லி தொடக்க வீரர் ரிஷப் பண்ட்டை பவுல்டு செய்ய கருண் நாயர், சஞ்சு சாம்சன் சில பவுண்டரிகளை அடித்து செட்டில் ஆயினர் ரன் விகிதம் ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் சென்றது. ஆனால் பவர் பிளேயின் கடைசி பந்தில் சாம்சன் எளிதான கேட்ச்சுக்கு 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கருண் நாயர் 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார், டுமினி 32 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். சாம் பில்லிங்ஸ் கடைசியில் அதிரடியாக ஆடினார். அஸ்வினை இவர் இரண்டு தொடர் சிக்சர்களை அடித்தார். பிராத்வெய்ட், முருகன் அஸ்வினை இரண்டு சிக்சர்கள் அடித்தார். ஆனால் ரஹானே, சவுரவ் திவாரியின் அற்புதமான பீல்டிங்கினால் 2 ரன் அவுட்கள் ஏற்பட்டது. பவன் நெகி 12 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க டெல்லி அணி ஓரளவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. ஆட்ட நாயகனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x