Published : 21 May 2022 11:31 PM
Last Updated : 21 May 2022 11:31 PM

IPL 2022 | மும்பையால் 'நிம்மதி'யடைந்த ஆர்சிபி - பிளே ஆப் சுற்றில் இருந்து டெல்லி கேபிட்டல்ஸ் அவுட்

நடப்பு ஐபிஎல் சீசனில் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. இன்று டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் விளையாடின. மும்பை ஏற்கனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிய நிலையில் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது.

ஆனால், டெல்லியின் பிளே ஆப் கனவை முதல் சில நொடிகளில் இருந்தே மும்பை அணி கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்தது. 160 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஓப்பனிங் ஜோடியில் ரோஹித் சர்மா கைகொடுக்க தவறி 2 ரன்களில் முதல் விக்கெட்டாக நடையைக் கட்டினாலும், மற்றொரு ஓப்பனர் இஷான் கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்லோவாக ஆரம்பித்தாலும் ஒருகட்டத்தில் அதிரடியை வெளிப்படுத்திய அவர், 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவருக்கு பக்கபலமாக இருந்த டெவால்ட் ப்ரீவிஸ் பொறுமையாக விளையாடி 37 ரன்கள் சேர்த்தார். இதன்பின் வந்த திலக் வர்மா, டிம் டேவிட் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். டிம் டேவிட் குறைந்த நேரமே காலத்தில் இருந்தாலும், அந்த நேரத்தில் 4 சிக்ஸர்களை விளாசி வாணவேடிக்கை காண்பித்தார். அவர் 11 பந்துகளில் 34 ரன்கள் எடுக்க, திலக் வர்மா 21 ரன்கள் சேர்த்தார். இருவரும் அவுட் ஆன நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய கலீல் அகமது முதல் பந்தே நோ பாலாக வீச, அடுத்து பிரீ ஹிட் மூலம் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் ரமன்தீப் சிங். தொடரை தோல்வியுடன் தொடங்கிய மும்பை, வெற்றியுடன் முடித்துள்ளது. டெல்லி அணி தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே, ஷர்துல் தாகூர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ராயல் சேலஞ்சர்ஸ் நிம்மதி

இந்த ஆட்டத்தில் தோற்றத்தன் மூலம் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 7 வெற்றிகளை பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வென்று ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்த அணி சிறப்பாக செயல்பட தவறியதால் தோல்வி கண்டு வெளியேறியது. அதேநேரம் மும்பையின் வெற்றியால் நான்காவது அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இன்று காலை முதலே மும்பை அணி வெற்றிபெற வேண்டும் என ராயல் சேலஞ்சர்ஸ் ட்விட்டரில் அதகளம் செய்து வந்தது ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. அவர்களின் பிரார்த்தனைக்கு ஏற்ப இப்போது மும்பை அணி வெற்றிபெற ராயல் சேலஞ்சர்ஸ் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளது.

டெல்லி கேபிட்டல்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தது. இந்த இணையை 3-வது ஓவரில் டேனியல் சாம்ஸ் பிரித்தார். இதனால், 5 ரன்களில் டேவிட் வார்னர் வெளியேற, மிட்செல் மார்ஷ் களத்திற்கு வந்தார். வந்த வேகத்தில் பும்ரா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி நடையைக் கட்டினார். பிரத்வி ஷாவும், பும்ரா வீசிய மற்றொரு ஓவரில் கேட்ச் கொடுத்து 24 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் . அடுத்து வந்த சர்ஃபராஸ் கானும் நிலைக்கவில்லை.

இதற்கு மேலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தால் அணியின் நிலைமை மோசமாகிவிடும் என்று எண்ணி, ரிஷப் பண்டும், ரோவ்மேன் பவல்லும் இணைந்து மும்பை அணியின் பந்துவீச்சுகளை நாலாப்புறமும் விரட்டி அடித்தனர். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பண்டை, ராமன்தீப் சிங் விக்கெட்டாக்க, அவர் 39 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, ரோவ்மேன் பவல்லும் 43 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அடுத்தாக களத்துக்கு வந்த ஷர்துல் தாக்கூர் 4 ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 159 ரன்களைச் சேர்த்தது. அக்ஷர் படேல் 19 ரன்களிலும், குல்தீப் யாதவ் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

மும்பை அணி தரப்பில், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ராமன்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், மயங்க் மார்கண்டே, டேனியல் சாம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x