IPL 2022 | “மிகவும் ரிலாக்ஸாக அணுகினேன்” - ஆர்சிபி அணிக்கு உயிர்கொடுத்த விராட் கோலி

IPL 2022 | “மிகவும் ரிலாக்ஸாக அணுகினேன்” - ஆர்சிபி அணிக்கு உயிர்கொடுத்த விராட் கோலி
Updated on
2 min read

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உயிர்ப்போடு வைத்துள்ளார் விராட் கோலி. குஜராத் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி அசத்தி இருந்தார் அவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து சொல்லவே வேண்டாம். அவரது குணாதிசயத்தை போலவே அவரது ஆட்டமும் அனல் பறக்கும். கடந்த சில ஆண்டுகளாக ஏனோ அதை அவர் மிஸ் செய்திருந்தார். அதுவும் நடப்பு ஐபிஎல் சீசனில் மிகவும் மோசமான ஃபார்மில் இருந்தார். ரன் சேர்க்கவே தடுமாறினார். இதில் சில இன்னிங்ஸில் அவர் செய்த தவறினால் விக்கெட்டை இழந்தார். சில இன்னிங்ஸில் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை என சொல்லலாம். 14 இன்னிங்ஸில் மூன்று முறை சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்திருந்தார்.

அதனால் இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் என பலரும் "நம்ம கோலிக்கு என்ன தான் ஆச்சு?" என்ற டோனில் கேள்வி எழுப்பி வந்தனர். சிலர் ஒரு படி மேலே சென்று அவருக்கு ஓய்வு வேண்டும் என சொல்லி இருந்தார்கள். ஆனால் அவருக்கு ஆர்சிபி அணியின் கேப்டனும், நிர்வாகமும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வந்தது. "இப்போ இல்லன்னா பின்ன எப்போவும் இல்ல" என கோலி பன்ச் வசனம் பேசுவது போல நடப்பு சீசனின் 14-வது இன்னிங்ஸில் அமர்க்களமாக ஆடி அசத்தினார்.

ஆர்சிபி அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாக இருந்தது. நெருக்கடி மிக்க போட்டியில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கோலி. அது நடப்பு சீசனில் ஆர்சிபி அணியின் பிளே-ஆஃப் வாய்ப்புக்கு உயிர் கொடுத்தது. இருந்தாலும் ஆர்சிபி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டியின் முடிவை பொறுத்தே உள்ளன. இதில் மும்பை வெற்றி பெற்றால் ஆர்சிபி-க்கு ஜாக்பாட் தான். இப்போதைக்கு புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது ஆர்சிபி.

"இந்த சீசனில் அணிக்காக எனது தரப்பில் பெரிய அளவில் பங்கீடு கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் என்னால் அணிக்கு தரமான இன்னிங்ஸ் ஆட முடிந்ததில் மனநிறைவு. இந்தப் போட்டியில் நான் முதல் ஷாட் ஆடிய போதே எனக்கு தெரிந்துவிட்டது பந்தை அடித்து ஆட முடியும் என்று. போட்டிக்கு முன்னதாக சுமார் 90 நிமிடங்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டேன். நான் மிகவும் ரிலாக்ஸாக போட்டியை அணுகினேன்" என தெரிவித்தார் கோலி. குஜராத் அணிக்கு எதிராக 54 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார் கோலி. அதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in