

உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண்பதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த பர்னலால் சாட்டர்ஜி-சேதாலி சாட்டர்ஜி தம்பதிகள் பிரேசிலுக்கு சென்றுள்ளனர். இந்த தம்பதியினர் உலகக் கோப்பை போட்டியை 9-வது முறையாக நேரில் கண்டுகளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
1982-ல் ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முதல்முறையாக இத்தம்பதியினர் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். அப்போது கால்பந்து மீது இவர்களுக்கு ஏற்பட்ட காதல், 32 ஆண்டுகளைக் கடந்த பிறகும் கொஞ்சம்கூட குறைந்தபாடில்லை. அதன்பிறகு நடைபெற்ற எந்தவொரு உலகக் கோப்பையையும் இவர்கள் நேரில் சென்று பார்க்காமல் விட்டதில்லை.
மெக்ஸிகோ, இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்/கொரியா, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று உலகக் கோப்பையை ரசித்த இந்தத் தம்பதி, தற்போது பிரேசிலுக்கு சென்றுள்ளது. பர்னலால் சாட்டர்ஜி 81 வயதை எட்டிவிட்டபோதிலும்கூட அவரின் கால்பந்து ஆர்வத்துக்கு மட்டும் இன்னும் வயதாகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கொல்கத்தாவில் இருந்து பிரேசில் செல்வதற்கு முன்பாக பிபிசிக்கு சாட்டர்ஜி தம்பதியினர் அளித்த பேட்டியின் ஒரு பகுதி:
நாங்கள் முதல்முறையாக 1982 உலகக் கோப்பை போட்டியை நேரில் கண்டுகளித்தோம். அப்போது கால்பந்து எங்களை மிகவும் கவர்ந்தது. இனிமேல் நடைபெறும் எல்லா உலகக் கோப்பையையும் நேரில் கண்டுகளிக்க வேண்டும் என அப்போதே முடிவு செய்தோம். உலகக் கோப்பை போட்டியை நேரில் பார்க்கும்போது மனதுக்குள் எழும் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது.
தொலைக்காட்சியில் நாம் போட்டியைப் பார்த்தால், அதில் கேமரா பந்தை மட்டுமே பின் தொடரும். வீரர்கள் எந்தெந்த நிலைகளில் ஆடுகிறார்கள். எப்படி உத்திகளை வகுத்து ஆடுகிறார்கள் என்பதையெல்லாம் தொலைக்காட்சியின் மூலம் காண இயலாது. சிலருக்கு சினிமா மீது ஆர்வம் இருக்கும். ஆனால் எங்களுக்கு கால்பந்தின் மீதுதான் ஆர்வம். அதற்கு நாங்கள் அடிமை என்றே சொல்லலாம். உள்ளூரில் நடைபெறும் போட்டிகளை நேரில் சென்று பார்ப்போம்.
உலகக் கோப்பை போட்டிக்கான செலவுத் தொகையை 4 ஆண்டுகளில் சிறுக சிறுக சேர்க்கிறோம். அதற்காக மீன் போன்ற இறைச்சி வகைகள் மற்றும் துரித உணவு வகைகளை தவிர்த்துவிடுவோம். 1986 உலகக் கோப்பையில் மரடோனா ஆடியவிதத்தை மறக்க முடியாது. தனியாளாக எதிரணியை வீழ்த்தினார். அவருக்கு நிகரான வீரர் யாருமே கிடையாது என கூறுகின்றனர்.