

தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் விதர்பா கிரிக்கெட் அணிக்கு விளையாடப்போவதாகக் கூறியுள்ளார். இவர் 14 ஆண்டு காலம் தமிழ்நாடு அணிக்கு விளையாடி வந்தார்.
விதர்பாவுக்குச் செல்வதற்கானக் காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை.
2000-01ஆம் ஆண்டில் இவர் முதல்தர கிரிக்கெட்டில் நுழைந்தார். தமிழ்நாடு அணிக்காக 85 முதல் தர போட்டிகளில் விளையாடி 6000 ரன்களை எடுத்துள்ளார். இதில் 22 சதங்கள் அடங்கும். சராசரி 57.
இரண்டே இரண்டு டெஸ்ட் வாய்ப்புகளே இவருக்கு வழங்கப்பட்டது. அதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 56. ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இவர் 7 போட்டிகளில் விளையாடி மொத்தம் 79 ரன்களே எடுத்து சோபிக்காமல் போனார்.
கடந்த ரஞ்சி சீசனில் 540 ரன்களை எடுத்த பத்ரிநாத்தின் சராசரி 49.09. விஜய் ஹசாரே கோப்பைக்கான 50 ஓவர் போட்டியிலும் இவர் அணியில் இருந்தார்.
ஆனால் 20 ஓவர் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டித் தொடருக்கு இவர் சேர்க்கப்படவில்லை. இதனையடுத்து ஐபிஎல் ஏலத்திலும் விற்கப்படாமல் போனார். இது தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக இவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 6 சீசன்கள் விளையாடினார் பத்ரிநாத் என்பது குறிப்பிடத் தக்கது.