

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு 16 வயதான ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம், தோனியின் பார்வைக்கு சென்றுள்ளது. அதை சிஎஸ்கே அணி நிர்வாகம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் உள்ள ஃபேன் பாலோயிங் (Fan Following) குறித்து சொல்ல வேண்டுமென்றால், அது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதனை வெறும் எண்களில் அடக்கிவிட முடியாது. ஏனெனில், இந்த எண் விளையாட்டுக்கு எல்லாம் அப்பாற்பட்டது அது. தோனிக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான அன்பு ஆத்மார்த்தமானது. அப்படிப்பட்ட ஒரு ரசிகர்தான் தனது அன்பை தோனிக்கு தெரிவிக்கும் விதமாக கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு 16 வயது என்று சொல்லப்படுகிறது.
அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அன்பையும், மரியாதையையும் கலந்து தனது மனம் கவர்ந்த நாயகன் தோனியை போற்றிப் பாடியுள்ளார் அவர். "இருளை பிரகாசிக்க செய்பவர் நீங்கள். ஏற்கெனவே பிரகாசமாக இருப்பதை கூடுதலாக பிரகாசிக்க செய்பவர் நீங்கள். உங்களின் ரசிகர்களாகிய நாங்கள் ஒரே மாதிரியானவர்களாக இருக்கிறோம். ஏனெனில் நீங்கள் எங்களது எல்லோரது வாழ்விலும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்" என அந்தக் கடிதம் தொடங்குகிறது.
அதை வாசித்து பார்த்த தோனி, சிறப்பாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள் என எழுதி தனது ஆட்டோகிராஃப்பை போட்டுள்ளார். அதை அப்படியே சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
தோனி, தனக்கு பணிவாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்வது எப்படி என்பதையும், வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் புரிய வைத்ததாக மேற்கோள் காட்டி கடிதத்தை நிறைவு செய்துள்ளார் அந்த ரசிகர். 'O CAPTAIN OUR CAPTAIN, உங்களை போல யாரும் இருக்க மாட்டார்கள்' எனவும் தெரிவித்துள்ளார் அவர். இப்போது அது பரவலாக நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.