

பாங்காக்: விளையாட்டில் வெற்றி பெற்றால் பிரதமர் வீரர்களை அழைத்து பேசுவது என்பது இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என தாமஸ் கோப்பையை வென்ற இந்திய பாட்மிண்டன் அணியில் இடம் பெற்றிருந்த நட்சத்திர வீரர் ஷிராக் ஷெட்டி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பாங்காக்கில் சமீபத்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரில் இந்திய ஆடவர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய 3-0 என்ற கணக்கில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை தோற்கடித்திருந்தது. 1949 முதல் நடத்தப்பட்டு வரும் தாமஸ் கோப்பை தொடரை இந்திய அணி முதன் முறையாக வென்றதால், ஒட்டுமொத்த அணி வீரர்களையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இந்திய பாட்மிண்டன் ஆடவர் அணியில் இடம்பெற்றிருந்த இரட்டையர் பிரிவு வீரரான ஷிராக் ஷெட்டி கூறும்போது, “ஒரு அணி வெற்றி பெற்றதும் பிரதமர் அந்த அணியை தொடர்பு கொண்டு பேசுவதை இதுவரை நான் பார்த்தது இல்லை. இது இந்தியாவில் மட்டுமே நடைபெறும். இது எங்களை ஊக்கப்படுத்தி புதிய நிலைக்கு கொண்டுசென்றது. பிரதமர் தனது மிகுதியான பணிச்சுமையிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நாங்கள் விளையாடிய விதம், எனது வாழ்வின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று என்று நினைக்கிறேன்” என்றார்.
இதற்கிடையே வரலாற்று சாதனை படைத்த இந்திய பாட்மிண்டன் அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, "எங்கள் சாம்பியன் அணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது“ என்றார்.