

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. 179 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியால் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள லக்னோ அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. இருப்பினும் அந்த அணி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-ம் இடம் வகிக்கிறது.
போட்டி முடிவடைந்ததும் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறும்போது, “179 ரன்கள் இலக்கு எட்டக்கூடியதாகவே கருதினேன். பந்து வீச்சில்சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தானை கட்டுப்படுத்தினோம். ஆனால் மீண்டும் ஒரு முறை குழுவாக பேட்டிங் திறனை வெளிப்படுத்த முடியாமல் போனது.
தொடக்கத்திலேயே விக்கெட்களை இழக்கும்போது அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. பேட்டிங் குழுவாக கடந்த 3 முதல் 4 ஆட்டங்களில் பவர் பிளேவில் தோல்வியடைந்துவிட்டோம். தரமான பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடி சிறந்த தொடக்கத்தை வழங்க வேண்டுமென்றால் களத்தில் நின்று விளையாடுவதற்கான வழிகளை கண்டறியவேண்டும். பேட்டிங் வரிசையில் பலம் உள்ளது. அதனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசும்போது புத்திசாலித்தனமாக விளையாடுவது தான் முக்கியம்” என்றார்.
இன்றைய ஆட்டம்
ஹைதராபாத் – மும்பை
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்