

ரோம்: ஆறாவது முறையாக இத்தாலி ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். இது நடப்பு ஆண்டில் அவர் வென்றுள்ள முதல் சாம்பியன் பட்டமாகும்.
செர்பிய நாட்டை சேர்ந்தவர் 34 வயதான ஜோகோவிச். டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் வீரர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சில பிரதான டென்னிஸ் தொடர்களில் அவர் விளையாடவில்லை. அதே நேரத்தில் இதற்கு முன்னதாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப், மாட்ரிட் ஓப்பன், செர்பிய ஓப்பன் போன்ற டென்னிஸ் தொடர்களில் விளையாடி இருந்தார்.
இந்நிலையில், இத்தாலி ஓப்பன் தொடரில் பங்கேற்று விளையாடினார் அவர். இந்த தொடரில் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் நேர் செட் கணக்கில் ஆட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆறாவது முறையாக அவர் இத்தாலி ஓப்பன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6 - 0, 7 - 6 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார் ஜோகோவிச். முன்னதாக, அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆயிரம் வெற்றிகளை பதிவு செய்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் அவர். இந்த சாதனையை படைத்துள்ள ஐந்தாவது வீரராகி உள்ளார் அவர். பிரெஞ்சு ஓப்பன் தொடருக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அவருக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி அவருக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.