

தாமஸ் கோப்பை பேட்மிண்டனில் 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சர்வதேச நாடுகளுக்கிடையே நடத்தப்படும் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் நேற்று பாங்காக்கில் ஆண்களுக்கான அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான டென்மார்க்கை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், பிரனாய் (ஒற்றையர் பிரிவு), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (இரட்டையர் பிரிவு) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, இறுதிப்போட்டியான இன்று நடப்பு சாம்பியன் இந்தோனேஷியாவுடன் இந்திய அணி பலப்பரீட்சை நடத்தியது. இதுவரை 14 முறை கோப்பை வென்ற இந்தோனேஷியாவுக்கு எதிராக இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இந்தோனேஷிய அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
தாமஸ் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய அணி தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை வரலாற்றில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறை.
ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், இரட்டையரில் சத்விக் சாய்ராஜ், சிராஜ் ஷெட்டி இணை வெற்றி பெற்று அசத்தியுள்ளது.பாட்மிண்டனில் சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனிடையே இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.