Published : 15 May 2022 07:58 AM
Last Updated : 15 May 2022 07:58 AM
மும்பை: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திறமைக்கேற்ப நாங்கள் விளையாடவில்லை என பெங்களூரு அணியின் கேப்டன்டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்தார்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது. 210 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
13 ஆட்டங்களில் விளையாடி உள்ள பெங்களூரு அணி 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் வரும் 19-ம் தேதி நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியை வீழ்த்தியாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
போட்டி முடிவடைந்ததும் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் கூறும்போது, “ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய விதம் எங்களது பந்து வீச்சாளர்களை மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. ஆட்டத்தில் இருந்து சற்று நாங்கள் பின்வாங்கியதாகவே உணர்ந்தேன்.
210 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோர்தான். ஆடுகளம் அருமையாக இருந்தது. இதுபோன்ற இலக்கை துரத்தும் போது கொத்துகொத்தாக விக்கெட்களை இழக்காமல் இருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக எங்களுக்கு அது நிகழ்ந்தது.
விராட் கோலியை பொறுத்தவரை ஆட்டமிழக்கக்கூடிய ஒவ்வொரு வழியும் அவருக்கு நடக்கிறது. மோசமான காலக்கட்டங்கள் அனைவருக்குமே ஏற்படும். அதை அவர், கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த இரவு எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை.
ஒருநாள் ஓய்வுக்கு பின்னர், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஆட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். ஒரே ஒரு வலைப்பயிற்சி உங்களை சிறந்த வீரராக மாற்றப்போவது இல்லை. அது மனதளவில் உங்களை வலிமையானதாக்கும். எங்களது திறமைக்கேற்ப விளையாடினால் நாங்கள் வலுவான அணியாக திகழ்வோம். துரதிருஷ்டவசமாக இந்த ஆட்டத்தில் நாங்கள் அதை செய்யவில்லை” என்றார்.
இன்றைய ஆட்டங்கள்
சென்னை – குஜராத்
நேரம்: பிற்பகல் 3.30
லக்னோ – ராஜஸ்தான்
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT