Published : 14 May 2016 02:01 PM
Last Updated : 14 May 2016 02:01 PM

தவணுக்கு பதில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு தரவேண்டியது ஏன்?- ஒரு பார்வை

இந்திய அணியில் ஒரு சில வீரர்களுக்கு கூடுதலாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஷிகர் தவணும் ஒருவர். ஆனால் தற்போது குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இவருக்குப் பதிலாக கவுதம் கம்பீரை கொண்டு வர வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன.

கவுதம் கம்பீர் மன உறுதி படைத்த வீரர், அனுபவமிக்கவர், ஆக்ரோஷமானவர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஆனால் ஷிகர் தவணுக்குப் பதிலாக 3 வடிவங்களிலும் கே.எல்.ராகுல் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதில் கூடுதல் நன்மைகள் ஏற்படும். முதலில் அவர் ஒரு விக்கெட் கீப்பராக இடம்பெறும்போது நாம் கூடுதல் பேட்ஸ்மெனையோ அல்லது பவுலரையோ அணியில் சேர்க்க முடியும்.

ஒருநாள் போட்டிகளில் ஒரு கட்டத்துக்குப் பிறகு ராகுல் டிராவிட்டை கங்குலி கீப் செய்ய அழைத்தததால் அப்போது கூடுதல் பவுலர் அல்லது பேட்ஸ்மெனை சேர்க்க வாய்ப்பிருந்தது, இதனால் கங்குலியால் நிறைய போட்டிகளில் வெல்ல முடிந்ததோடு, புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வர முடிந்தது.

ஆனால் நடப்பு இந்திய அணியில் விராட் கோலி தலைமை டெஸ்ட் அணியில் ஓரளவுக்கு வீர்ர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி பரிசோதிக்கப்பட்டாலும் குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் ஸ்திரத்தன்மை, அணிச்சேர்க்கை கொள்கை என்ற பெயரில் புதுமுகங்கள் வரவுக்கு இடமில்லாமல் தோனி தலைமை ஒரு இறுகிய ரெஜிமெண்டட் தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது தோனியினால் புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. அவர் அதற்குத் தயாராகவும் இல்லை இதனால் இருக்கும் நிலைமைகளையே தக்க வைக்க முயற்சி செய்கிறார். இதனால்தான் ஜடேஜா, ஷிகர் தவண் போன்றவர்கள் அங்கு செல்லுபடியாகின்றனர். அமித் மிஸ்ரா, மணிஷ் பாண்டே, அம்பாத்தி ராயுடு உள்ளிட்ட பல வீரர்கள் தேவையில்லாமல் வெளியில் இருக்க நேரிடுகிறது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக கே.எல்.ராகுலின் எழுச்சி மிகு பேட்டிங் அவரை ஏன் 3 வடிவங்களிலும் இந்திய தேர்வுக்குழுவினர் அணியில் தேர்வு செய்யக்கூடாது என்ற கேள்வி அனைத்து ரசிகர்களிடத்திலும் தோன்றியுள்ளது. தொடக்கத்திலும் இறங்குகிறார், நடுவரிசையிலும் இறங்குகிறார், விக்கெட் கீப்பிங் செய்கிறார், எனவே இவரை ஒரு பெரிய வீரராக வளர்த்தெடுப்பது இந்திய அணித்தேர்வுக்குழுவின் கையில் உள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக 7 போட்டிகளில் ஆடியுள்ள கே.எல்.ராகுல் 147.48 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன், 44 ரன்கள் சராசரியுடன் 264 ரன்கள் குவித்துள்ளார். இவர் பிக் ஹிட்டராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நார்மல் கிரிக்கெட் ஷாட்கள் மூலமே இவரால் விரைவு ரன்களை குவிக்க முடிகிறது.

மேலும் டி20 கிரிக்கெட்டில் பிக் ஹிட்டர்கள் என்று கருதப்படும் வீரர்கள் பலர் 5-6 போட்டிகளுக்கு ஒருமுறைதான் ‘கிளிக்’ ஆகிறார்கள். ராகுல் போன்ற வீரர்கள்தான் சீரான முறையில் ரன்களை எடுத்துக் கொடுப்பவர்கள். ஷிகர் தவண் தற்போது சன் ரைசர்ஸ் அணிக்காக கடந்த சில போட்டிகளில் ஆடிவரும் இன்னிங்ஸ்கள் அணியின் சூழ்நிலைமையைக் கருத்தில் கொண்டு ஆடப்படும் இன்னிங்ஸ்கள் அல்ல, கவுதம் கம்பீரிடம் தன் இடத்தை இந்திய அணியில் இழந்து விடுவோம் என்ற கவலையில் விளையாடப்படும் சுயநல இன்னிங்ஸ் என்பது அவர் ரன் எடுக்காமல் விடும் ‘டாட்’ பால்களைக் கொண்டே நாம் மதிப்பிட முடியும்.

மேலும் இந்தியாவுக்காக 22 டி20 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள ஷிகர் தவண் 416 ரன்களை மட்டுமே 20.80 என்ற சராசரியில் எடுத்துள்ளார். சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20 போட்டிகளில் தவணின் அதிகபட்ச ஸ்கோர் 23, சராசரி 11 ரன்களுக்கும் குறைவு.

டெங்கு காரணமாக வங்கதேச தொடரை இழந்த ராகுல், பிறகு இலங்கைத் தொடரில் விளையாடினார். சஹா காயமடைந்த போது டெஸ்ட் போட்டியில் இவரது விக்கெட் கீப்பிங் திறமைகளும் வெளிப்பட்டது. அந்தப்போட்டியில் சதம் அடித்த ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார், இந்திய அணி இலங்கையை வீழ்த்தியது.

இந்நிலையில் நீண்ட நாளைய தொடக்க வீரரை உருவாக்குவதில் இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் உறுதியான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. ஷிகர் தவண் போன்றவர்களிடத்தில் தொடக்க வீரருக்கேயுரித்தான வலுவான உத்திகள் இல்லை. அவரை நல்ல பவுலர்கள் எளிதில் கழற்றி விடுகின்றனர், அவருக்கும் தன்னுடைய பலவீனம் என்னவென்பதைக் களைந்து கொள்ளவும் நாட்கள் ஆகின்றன. இப்போதிருக்கும் வசதிகளில் அவர் தொடர்ந்து ரன்கள் எடுக்காமல் சர்வதேச கிரிக்கெட்டில் சொதப்பி வருவது, அவரது அணுகுமுறையில் உள்ள கோளாறாகவே பார்க்கப்பட வேண்டும். இதற்குச் சிறந்த மருத்துவம் அணியிலிருந்து சிலகாலம் நீக்கப்படுவது. கம்பீருக்கு அந்த மருத்துவம் தற்போது கைகொடுத்துள்ளது, யுவராஜ் சிங்கிற்குக் கை கொடுத்துள்ளது. ஷிகர் தவணுக்கும் கைகொடுக்க ராகுலுக்கு உடனடியாக 3 வடிவங்களிலும் வாய்ப்பளிக்க வேண்டும்.

மாறாக தன் முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் தோல்வியடைந்த கே.எல்.ராகுல், தனது கர்நாடக நம்பிக்கை அறிவுரையாளரும் முன்னாள் இந்திய பேட்டிங் சுவருமான ராகுல் டிராவிடிடம் தனது பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தார், சிட்னியில் சதம் எடுத்தார். இன்றும் ராகுல் திராவிடிடம் அவர் ஆலோசனைகள் பெற்று வருகிறார் இதுதான் பெரிய வீரராக உருவெடுப்பதற்கான அடித்தளம், இது ராகுலிடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x