

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் தொடர்ந்து நீடிக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்ய அதன்படி, வெங்கடேஷ் ஐயர், ரஹானே ஜோடி துவக்கம் கொடுத்தது. 2 ஓவர்கள் வரைகூட இவர்கள் இணை தாக்குபிடிக்கவில்லை. 7 ரன்களில் வெங்கடேஷ் ஐயர் முதல் விக்கெட்டாக நடையை கட்ட, ரஹானே 28 ரன்களுக்கு அவுட் ஆனார். தொடர்ந்து, நிதிஷ் ராணா 26 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும் சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் கொல்கத்தா அணியின் ரன்ரேட் உயர்ந்துகொண்டே சென்றது. ரஸ்ஸல் இறுதி ஓவரில் தனது அதிரடியை வெளிப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்ந்தது கொல்கத்தா அணி. ரஸ்ஸல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 49 ரன்களும், பில்லிங்ஸ் 34 ரன்களும் எடுத்தார். ஹைதராபாத் தரப்பில் உம்ரான் மாலிக் மூன்று விக்கெட்டை வீழ்த்தினார்.
தொடர்ந்து 178 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். கேப்டன் கேன் வில்லியம்சன், பவர் பிளே வரைகூட நிலைக்கவில்லை. அவரும், அவருக்கு அடுத்து வந்த ராகுல் திரிபாதியும் தலா 9 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் இருந்த அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 43 ரன்கள் சேர்த்திருந்தார். வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் அவரும் அவுட் ஆக ஹைதராபாத் அணி தடுமாறியது.
எய்டன் மார்க்ரம் மட்டும் அடுத்துவந்த வீரர்களில் ஓரளவு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் அவுட் ஆகினார். இதன்பின் பின்வரிசை வீரர்கள் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்விகண்டது சன்ரைசர்ஸ் அணி. பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ரஸ்ஸல் பவுலிங்கிலும் மூன்று விக்கெட் வீழ்த்தி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவருடன் டிம் சவுத்தி 2 விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
54 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா அணி 6வது வெற்றியை பதிவுசெய்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.