

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
40 வயதான மெக்கல்லம், நியூசிலாந்து அணிக்காக 101 டெஸ்ட், 260 ஒருநாள் மற்றும் 71 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 6,453 ரன்கள் சேர்த்துள்ளார். அவர் நியூசிலாந்து அணியை கேப்டனாகவும் முன்னின்று வழிநடத்தி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளர் பணியை கவனிக்க தொடங்கினார். டி20 கிரிக்கெட் லீக் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் அவர் தான்.
இந்நிலையில், அவரை இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமித்துள்ளது அந்நாட்டு வாரியம். "அடுத்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து மெக்கல்லம் தனது பணியை தொடங்குவார்" என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த பணிக்கு அவர் சரியானவர் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் புகழ்ந்துள்ளனர். கேரி கிர்ஸ்டன் உட்பட பலரது பெயர் இந்த பயிற்சியாளர் பணிக்கு பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. அணி தற்போது எதிர்கொண்டு வரும் சவால்கள் என்ன என்பதை நான் அறிவேன். நிச்சயம் அதனை கடந்து, வலுவான அணியாக முன்னேற எனது பங்களிப்பை நான் கொடுப்பேன்" என தெரிவித்துள்ளார் மெக்கல்லம்.
நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரும் நாட்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது இங்கிலாந்து.