Published : 12 May 2022 07:42 AM
Last Updated : 12 May 2022 07:42 AM
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் அறிமுக அணியாக களமிறங்கிய போதிலும் இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சிய நிலையில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வியக்கவைத்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி 18 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.
கடினமான ஆடுகளத்தில் ஷுப்மன் கில்லின் (63 ரன்கள்) உதவியுடன் 144 ரன்கள் மட்டுமே சேர்த்த போதிலும் ரஷித் கான், சாய் கிஷோர், யாஷ் தயாள் ஆகியோரது நேர்த்தியான பந்து வீச்சால் லக்னோ அணியை 82 ரன்களுக்கு சுருட்டி மிரளச் செய்தது குஜராத் அணி.
கடந்த பிப்ரவரி மாதம் நடை பெற்ற ஐபிஎல் ஏலத்துக்கு பிறகு, குஜராத் அணியின் பேட்டிங்கை மக்கள் வெகுவாக சுட்டிக்காட்டினர். பந்து வீச்சு சிறப்பாக வரிசைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும் பேட்டிங் வரிசை பலவீனமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த சீசன்களில் ரன்கள் பற்றாக்குறையுடன் திகழ்ந்த டேவிட் மில்லர், ஷுப்மன் கில்லின் பார்ம் கவலைக்குரியதாக கருதப்பட்டது.
மேலும் ராகுல் டெவாட்டியாவும் ஷார்ஜாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இன்னிங்ஸுக்குப் பிறகு அதிகம் கவனத்தை ஈர்க்கவில்லை. ஹர்திக் பாண்டியா உயர்ந்த பேட்டிங் நிலை மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பந்து வீச்சுடன் போட்டிக்கு வரும் வரை அவர் விளையாடுவதை மக்கள் பார்க்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடாத அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் வாங்கப்பட்டதால் பல விமர்சனங்கள் எழுந்தன.
இவை அனைத்தையும் வெற்றிபடிக் கற்களாக மாற்றி ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது. அறிமுக அணியான குஜராத் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இரு வாய்ப்புகளை பெறவும் சாத்தியம் உள்ளது.
கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “நாங்கள் இந்த பயணத்தை ஒன்றாக இணைந்து தொடங்கினோம். அப்போது எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்தோம். எங்களை நாங்கள் நம்பினோம். லீக் சுற்றில் இன்னும் 2 ஆட்டங்கள் மீதம் உள்ள நிலையில் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்குதகுதி பெற்றுள்ளோம். இது சிறந்த முயற்சி, எங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT