

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
33 வயதான ஜடேஜா கடந்த 2012 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார். இடையில் 2016 மற்றும் 2017 சீசன்களில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். 2008 மற்றும் 2009 சீசன்களில் ராஜஸ்தான் அணிக்காக அவர் விளையாடினார். 2011-இல் கொச்சி அணிக்காக விளையாடினார். ஆல்-ரவுண்டரான அவர் மொத்தம் 210 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2502 ரன்களும், 132 விக்கெட்டுகளும், 88 கேட்சுகளும் பிடித்துள்ளார்.
நடப்பு சீசனில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 16 கோடி ரூபாய்க்கு அவரை தக்கவைத்தது சென்னை அணி. கேப்டனாக அவரது செயல்பாடு கொஞ்சம் மோசமாகவே இருந்தது. மேலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் ஜடேஜா சொதப்பினார். வெற்றி பெற முடியாமல் சிஎஸ்கே தவித்தது. அதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத ஜடேஜா, தோனி வசம் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். தொடர்ந்து காயம் காரணமாக கடந்த போட்டியை மிஸ் செய்தார். இப்போது தொடரைவிட்டே விலகி உள்ளார்.
அடுத்த சீசனில் புத்துணர்ச்சியுடன் ஜடேஜா களம் இறங்குவார் என நம்புவோம்.