13 ஆண்டு கால தேடல்: இந்திய ஹாக்கி அணியில் இடம்பெறும் இரு தமிழக வீரர்கள்!

கார்த்தி மற்றும் மாரீஸ்வரன்.
கார்த்தி மற்றும் மாரீஸ்வரன்.
Updated on
1 min read

சென்னை: இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரியலூரை சேர்ந்த கார்த்தி மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேலும் தான் அந்த இரண்டு வீரர்கள்.

இந்திய ஹாக்கி அணி இந்தோனேசியாவில் வரும் 23 முதல் ஜூன் 1 வரை நடைபெற உள்ள ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது. இது 11-வது ஆசிய கோப்பை தொடராகும். மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடரில் இந்தியா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தில் இந்த தொடரில் களம் காண்கிறது இந்தியா. 5 முறை இரண்டாவது இடம்பிடித்துள்ளது. இந்தத் தொடருக்கான அணியில்தான் கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் தேர்வாகியுள்ளனர்.

13 ஆண்டுகால தேடல்: சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சீனியர் ஆடவர் ஹாக்கி அணியில் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர். கடைசியாக தமிழகத்தை சேர்ந்த குணசேகர் மற்றும் நவீன் 2009-இல் நடைபெற்ற ஆசிய கோப்பையில் விளையாடி இருந்தனர். அதன் பிறகு இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம்பிடிக்கவில்லை. இப்போது அந்த காத்திருப்பு கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் முற்றுப் பெற்றுள்ளது.

இதில் கார்த்தி அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். 20 வயதான அவர் எளிய குடும்பத்தை சேர்ந்தவர். முன்கள (Forward) வீரர். "அணியில் தேர்வு செய்யப்பட்ட விவரத்தை அறிந்ததும் கொஞ்சம் பதற்றமாக உணர்ந்தேன். ஆனால், இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது" என தெரிவித்துள்ளார். 21 வயதான மாரீஸ்வரன், மிட்ஃபீல்டர். இந்திய அணியை ரூபிந்தர் பால் சிங் கேப்டனாக வழிநடத்துகிறார்.

வீரர்கள் இருவரையும் தமிழ்நாடு ஹாக்கி பிரிவு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டால் இந்திய அணிக்காக பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடுவார்கள் என தமிழ்நாடு ஆடவர் அணியின் தலைமை தேர்வாளர் ஆடம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in