

மும்பை: ஆடும் லெவனுக்கான அணி தேர்வில் சிஇஓ ஈடுபடுகிறார் என வெளிப்படையாகத் தெரிவித்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர். அவரது இந்த ஓபன் டாக் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. புள்ளிப் பட்டியலில் தற்போது அந்த அணி ஏழாவது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட பிளே-ஆஃப் செல்வது அந்த அணிக்கு அரிதினும் அரிதான வாய்ப்பாகவே உள்ளது. குறிப்பாக, அந்த அணியின் ஆடும் லெவனில் தொடர்ந்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு வீரர்களுடன் களம் இறங்குகிறது கொல்கத்தா. அதனால் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது அந்த அணி.
ஷ்ரேயஸ் ஐயர்: நடப்பு சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஷ்ரேயஸ் ஐயர். அவரும் முதல் சில போட்டிகளில் துடிப்புடன் செயல்பட்டார். அதற்கு சிறந்ததொரு உதாரணமாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடிய ஆட்டத்தை சொல்லலாம். அந்தப் போட்டியில் கொல்கத்தா முதலில் பேட் செய்து 128 ரன்கள் எடுத்திருக்கும். 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை விரட்டிய ஆர்சிபி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எப்படியோ ஒருவழியாக போராடி அடைந்திருக்கும். அந்த அளவிற்கு தனது பவுலிங் யூனிட்டை வைத்து எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார் ஷ்ரேயஸ். அதற்காக அவர் அப்போது பாராட்டையும் பெற்றிருந்தார்.
கேப்டன்சி திறன் அவரது ரத்தத்தில் கலந்தது போலவே இருந்தது. பின்னர் வரிசையாக ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது கொல்கத்தா. கடைசியாக மும்பை அணிக்கு எதிராக 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்துள்ளது.
இந்தப் போட்டி முடிந்ததும் ஆடும் லெவனில் வீரர்கள் ஏன் தொடர்ச்சியாக உங்கள் அணியில் மாற்றப்பட்டு வருகிறார்கள். அதற்கான காரணம் என்ன என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. "அது மிகவும் கடினமான ஒன்று. ஆடும் லெவனில் நீங்கள் இல்லை என சில வீரர்களிடம் சொல்ல வேண்டி இருக்கும். எனது ஆரம்பகால ஐபிஎல் கிரிக்கெட்டில் இதனை நான் எதிர்கொண்டுள்ளேன். ஆடும் லெவன் தேர்வில் பயிற்சியாளர் மற்றும் சிஇஓ (சில சமயங்களில்) பங்கீடு இருப்பதுண்டு. அது குறித்து பயிற்சியாளரே நேரடியாக வீரர்களிடம் சென்று சொல்லிவிடுவார். இப்படி அணியின் ஒவ்வொரு முடிவுக்கும் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதரவை அளித்து வருகிறார்கள். வீரர்களின் இந்த மனப்பான்மை ஒரு கேப்டனாக எனக்கு பெருமை" என தெரிவித்தார் ஷ்ரேயஸ்.
அவரது இந்த கருத்துதான் ரசிகர்களை பல்வேறு விதமாக பேச வைத்துள்ளது. அவர் கொல்கத்தா அணியில் அடுத்த சீசன் விளையாடமாட்டார். அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என சொல்லி வருகின்றனர். கொல்கத்தா அணியின் சிஇஓ ஆக இயங்கி வருகிறார் வெங்கி மைசூர். ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லா அந்த அணியின் உரிமையாளர்களாக உள்ளனர்.