Published : 10 May 2022 07:54 AM
Last Updated : 10 May 2022 07:54 AM

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் - நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் இலக்கு

மகன் வேதாந்துடன் நடிகர் மாதவன். (கோப்புப் படம்)

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லவேண்டும் என்பதுதான் எனது இலக்கு என்று நடிகர் மாதவனின் மகனும், நீச்சல் வீரருமான வேதாந்த் மாதவன் தெரிவித்தார்.

நடிகர் மாதவனுக்கு வேதாந்த் என்கிற மகன் உள்ளார். 16 வயதாகும் வேதாந்த் தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். கடந்த மாதம் டென்மார்க் நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற வேதாந்த், ஆண்களுக்கான 800 மீட்டர் நீச்சல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னதாக நடைபெற்ற 1,500 மீட்டர் போட்டியில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

வெற்றி குறித்து வேதாந்த் மாவதன் கூறும்போது, “இந்தப் போட்டிக்காக அதிக நேரம் பயிற்சி எடுத்தேன். தற்போது 2 பதக்கங்கள் வென்றுள்ளது அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்காக ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. எனது பயிற்சியாளர், தாய், தந்தை, உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர் என அனைவருக்கும் எனது நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இதை சாதித்திருக்க முடியாது. மேலும் இந்திய நீச்சல் சம்மேளனத்துக்கும் நன்றி. இதைத் தொடர்ந்து தேசிய ஜூனியர் போட்டிகள், தேசிய சீனியர் போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறேன். என்னுடைய முக்கிய குறிக்கோளே ஒலிம்பிக் போட்டிதான். அதில் பதக்கம் வெல்லவேண்டும் என்பதே இலக்கு.

எனது தந்தை மாதவன் எனக்கு அதிக அளவில் ஊக்கம் கொடுத்து வருகிறார். அவர் அதிக நாடுகள், அதிக இடங்களுக்குப் பயணம் செய்வார். எங்கிருந்தாலும், எனக்கு போன் செய்து விசாரிப்பார். ஊக்கம் அளிப்பார். போட்டிக்கு முன்னதாக போன் செய்து போட்டியில் சிறப்பாக செய்ய வேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளை அளிப்பார். அதுபோன்ற ஆதரவான வார்த்தைகள் எப்போதும் அவரிடமிருந்து வரும். அவரிடமிருந்து கிடைக்கும் மன, உடல் ரீதியான ஆதரவு அனைத்து விதமான தடகள வீரர்களுக்கும் தேவை. அதுபோன்ற தந்தை கிடைத்ததற்கு நான் பாக்கியம் செய்துள்ளேன். நான் பதக்கம் வென்றபோது தந்தை மாதவன் ஆனந்தக் கண்ணீரால் என்னை நனைத்தார். தாயும், தந்தையும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x