

தாஷ்கண்ட்: சீனாவின் ஹாங்சோ நகரில் வரும் செப். 10 முதல் 25-ம் தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக ஷாங்காய் நகரில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை நிலவி வந்தது.
இந்நிலையில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் நிர்வாகக் குழு தாஷ்கண்ட்டில் நேற்று கூடி, சீனாவில் நிலவி வரும் சூழல் குறித்து விவாதித்தது. இதில் ஆசிய விளையாட்டு போட்டியை காலவரையின்றி ஒத்திவைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
அதேவேளையில் போட்டி நடைபெறும் புதிய தேதி சீன ஒலிம்பிக் கமிட்டி, ஹாங்சோ ஆசிய விளையாட்டு ஏற்பாட்டுக் குழு ஆகியவற்றுடன் ஆலோசிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
போட்டி நடைபெறும் ஹாங்சோ பகுதிக்கு செல்ல ஷாங்காய் நகரில் இருந்துதான் ரயிலில் பயணம் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஷாங்காய் நகர், கரோனா தொற்றால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும், டிசம்பர் 20 முதல் 28 வரை சீனாவின் சாந்தோவில் நடைபெறவிருந்த 3-வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025-ல் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.