Published : 06 May 2022 03:22 PM
Last Updated : 06 May 2022 03:22 PM

IPL 2022 | தனது பழைய அணியை பந்தாடிய வார்னர்: டி20-ல் அதிக அரை சதம் பதிவு செய்து சாதனை

மும்பை: தனது முன்னாள் ஐபிஎல் அணியை தனது அபார பேட்டிங் திறனால் பந்தாடியுள்ளார் டெல்லி வீரர் டேவிட் வார்னர். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர். கடந்த 2009 முதல் ஐபிஎல் அரங்கில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் அவர். இதுவரை மொத்தம் 158 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன் மூலம் 5805 ரன்கள், 4 சதம் மற்றும் 54 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். டெல்லி மற்றும் ஹைதராபாத் (2014 - 2021) அணிகளுக்காக அவர் விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 356 ரன்கள் குவித்துள்ளார் அவர்.

இப்படி அசத்தலான ஃபார்மில் இருக்கும் அவரை கடந்த சீசனில் ஹைதராபாத் அணி ஆடும் லெவனில் கூட சேர்க்காமல் இருந்தது. அப்போது பெவிலியனில் இருந்தபடி ஹைதராபாத் அணிக்காக கொடி அசைத்துக் கொண்டிருக்குந்தார் வார்னர். அது அவர் உட்பட அவரது ரசிகர்களுக்கும் கசப்பை கொடுத்திருந்தது. பின்னர் அந்த அணியில் அவர் தக்க வைக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் 6.25 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி அவரை ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில், தனது பழைய அணியான ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் 58 பந்துகளில் 92 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளார்.

"இந்தப் போட்டியில் எனக்கு கூடுதல் ஊக்கம் எதுவும் தேவைப்படவில்லை. ஏனென்றால் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் பார்த்துள்ளோம். இந்த வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி. பவல், லிவிங்ஸ்டன் போன்ற வீரர்கள் சாதாரணமாக பல மீட்டர் தூரத்திற்கு சிக்சர் விளாசுகிறார்கள். எனக்கு வயதாகி விட்டது என நினைக்கிறேன். நான் ஜிம்முக்கு போக வேண்டும். ஏனெனில் நான் வெறும் 85 மீட்டர் தூரம் தான் சிக்சர் பறக்க விடுகிறேன். ஆனால் ஏதேனும் ஒரு நிலையில் நான் 100 மீட்டர் சிக்சர் விளாசுவேன் என நம்புகிறேன். ஸ்விட்ச் ஹிட் முறையில் விளையாட நிறைய பயிற்சி செய்து வருகிறேன்" என தெரிவித்தார் வார்னர்.

இந்தப் போட்டியில் சதம் விளாசுவதை காட்டிலும் மறுமுனையில் அதிரடியாக பேட் செய்து கொண்டிருந்த பவலை முடிந்தவரை அடித்து ஆடு என வார்னர் தெரிவித்ததாகவும் சொல்லி இருந்தார் பவல். 92 ரன்களை குவித்த வார்னர் இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். மொத்தம் 89 அரை சதங்களை வார்னர் பதிவு செய்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் கெயில் 88 அரை சதங்களை விளாசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x