IPL 2022 | கைகொடுக்காத ஓப்பனிங், பின்வரிசை வீரர்கள் - டெல்லியிடம் வீழ்ந்த ஹைதராபாத்

IPL 2022 | கைகொடுக்காத ஓப்பனிங், பின்வரிசை வீரர்கள் - டெல்லியிடம் வீழ்ந்த ஹைதராபாத்
Updated on
1 min read

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியுள்ளது.

208 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரே அதிர்ச்சி கொடுத்தார் கலீல் அகமது. அவரின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார் சன்ரைசர்ஸ் ஓப்பனிங் வீரர் அபிஷேக் ஷர்மா. மற்றொரு ஓப்பனிங் வீரர் கேன் வில்லியம்சன் 4 ரன்களோடு நடையை கட்டினார். இதன்பின் ராகுல் திரிபாதி மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், பார்ட் டைம் பவுலர் மிட்சேல் மார்ஷ் 22 ரன்கள் எடுத்திருந்த திரிபாதியை அவுட் ஆக்க, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மார்க்ரமை குல்தீப் யாதவ் வெளியேற்றினார். மார்க்ரம் 42 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

இதன்பின்னே விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு பக்கபலமாக இருக்க பின்வரிசை வீரர்கள் தவறினர். பூரன் 62 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்களும், ஷர்துல் தாகூர் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்தார். டெல்லி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மிட்சல் மார்ஷ் 10 ரன்களில் அவுட்டானார்.

தொடர்ந்து வந்த கேப்டன் பந்த், வார்னர் உடன் இணைந்து 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். பந்த் 26 ரன்களில் அவுட்டானார். ரோவ்மேன் பவல் களத்திற்கு வந்தார். இருவரும் பேட்டிங்கில் அதிரடி காட்டினர். பவல் 35 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். வார்னர் 58 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்திருந்தார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது டெல்லி.

ஹைதராபாத் அணிக்காக புவனேஷ்வர் குமார், அபாட் மற்றும் ஷ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தனர். இந்தப் போட்டியில் டெல்லி அணி பிளேயிங் லெவனில் 4 மாற்றங்களை செய்திருந்தது. ஹைதராபாத் அணி 3 மாற்றங்களை செய்திருந்தது. தற்போது ஹைதராபாத் அணி தனது இலக்கான 208 ரன்களை விரட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in