Published : 24 May 2016 07:47 PM
Last Updated : 24 May 2016 07:47 PM

பிரெஞ்சு ஓபன்: ஏஞ்ஜலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி; போராடி முர்ரே வெற்றி

ஆண்டின் 2-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரிசில் நடைபெற்று வருகிறது. 3-வது நாளான இன்று மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்ஜலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

தரவரிசையில் 58-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கெர்பரை தோற்கடித்து தொடரில் இருந்து வெளியேற்றினார். 24 வயதான பெர்டென்ஸ் கடந்த வாரம் நுரெம்பெர்க் போட்டியில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இரு கோப்பைகளை மட்டுமே வென்றுள்ள அவர், கெர்பருக்கு முதல் செட்டில் கடும் நெருக்கடி கொடுத்தார். அவரது சர்வீஸை இருமுறை பிரேக் செய்தார். இதற்கு 2-வது செட்டில் கெர்பர் பதிலடி கொடுத்தார்.

வெற்றியை தீர்மானித்த 3-வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய பெர்டென்ஸ், கெர்பரை அதிர்ச்சி தோல்வியடையச் செய்தார். இரண்டாவது சுற்றில் இத்தாலியின் கமிலா கியோர்கி அல்லது பிரான்சின் அலிஸி லிம்மை எதிர்கொள்கிறார் பெர்டென்ஸ்.

ஆடவர் ஒற்றையர்; நடால், முர்ரே வெற்றி

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 22-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் பெர்னார்டு டாமிக் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 662-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பிரையன் பாக்கர் வீழ்த்தினார்.

இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் 3-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெர்னார்டு டாமிக் பெற்றுள்ளார்.

2-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 3-6, 3-6, 6-0, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் 37 வயதான தகுதி சுற்று வீரரான செக்குடியரசின் ரடேக் ஸ்டெபனேக்கை தோற்கடித்தார். முதல் இரண்ட செட்களையும் பறிகொடுத்த முர்ரே அடுத்த 3 செட்களிலும் ஆக்ரோஷமாக ஆடினார். சுமார் 3 மணி நேரம் 41 நிமிடங்கள் போராடியே இந்த வெற்றியை ஆன்டி முர்ரே பெற்றார். முர்ரே தனது இரண்டாவது சுற்றில் தரவரிசையில் 164-வது இடத்தில் உள்ள பிரான்சின் மத்தியாஸை சந்திக்கிறார்.

பிரெஞ்சு ஓபனில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-1, 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் சாம் கிராத்தை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். 97-ம் நிலை வீரரான சாம் கிராத்தை வீழ்த்த நடால் 80 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார். பாரிசில் நடாலும் பெறும் 71-வது வெற்றி இதுவாகும். இங்கு அவர் இரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x