Published : 05 Jun 2014 03:13 PM
Last Updated : 05 Jun 2014 03:13 PM

இந்திய மண்ணில் வெல்ல ஆஸ்திரேலியாவின் புதிய உத்தி

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தை ஆஸ்திரேலியா மீண்டும் பிடித்தாலும், இந்தியாவுக்கு எதிராக இங்கு டெஸ்ட் போட்டியில் 4-0 என்று தோற்றது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை புதிய முறையில் சிந்திக்கத் தூண்டியுள்ளது.

இந்தியாவில் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக மண்ணின் தன்மை இருப்பதால் இந்தியாவிலிருந்து மண்ணைக் கொண்டு சென்று அங்கு பிட்ச் அமைத்து பயிற்சி செய்ய ஆஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது.

பிரிஸ்பன் மைதானத்தில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் மினி-இந்திய பிட்ச்களைத் தயாரித்து பயிற்சி செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் அடுத்ததாக கிரிக்கெட் தொடரை ஆடவிருக்கும் ஆஸ்திரேலியா சயீத் அஜ்மல் உள்ளிட்ட பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய வகைப் பிட்ச்கள் பெரிதும் உதவும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கருதுகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக எங்களது மிகப்பெரிய சவால் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே சிறப்பாக விளையாட முடியாமல் போவதே. இந்தியாவில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை, துபாயில் கூட பிட்ச்கள் இந்தியப் பிட்ச் போன்றுதான் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவே அவர்கள் பிட்ச் அமைப்பார்கள் என்று நினைக்கிறேன், அவர்கள் அணியில் 3 ஸ்பின்னர்கள் உள்ளனர். நாங்கள் சிறப்பாக ஆட வழிவகையைக் கண்டுபிடித்தாக வேண்டும்" என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்குள் இந்திய மண் தன்மை கொண்ட பிட்ச் தயாராகாவிட்டாலும் அடுத்து இந்தியாவுக்கு எதிரான தொடரில் அது பயன் தரும் என்று ஆஸ்திரேலியா கருதுகிறது.

ஆஸ்திரேலிய அணியில் ஓரிரு வீரர்களே பந்துகள் ஸ்பின் ஆகும் பிட்ச்களில் நன்றாக ஆடுகின்றனர். மற்றபடி ஒட்டுமொத்தமாக அந்த அணி ஸ்பின்னிற்கு எதிராக திணறியே வருகிறது.

இந்தப் புதிய உத்தி அவர்களுக்குக் கை கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடுவதற்கு தயார் ஆவதை விட, கிரேம் ஸ்வான், அல்லது மாண்ட்டி பனேசர் போன்ற பவுலர்களைத் தயார் செய்தாலே போதும் இந்திய பேட்ஸ்மென்கள் தடுமாறுவது உறுதி. அப்படித்தானே அலிஸ்டர் குக் தலைமை இங்கிலாந்து அணி இங்கு வந்து டெஸ்ட் தொடரை வென்றது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x