

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 48-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் பேட்டிங் செய்தாலும், முன்னணி வீரர்கள் நிலைக்க தவறினர். ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும். இளம் வீரர் சாய் சுதர்சன் மட்டும் 65 ரன்கள் எடுக்க அவரின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களே எடுத்தது. கசிகோ ரபாடா பஞ்சாப் அணிக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
எட்டக்கூடிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வழக்கத்துக்கு மாறாக ஷிகர் தவானுடன், ஜானி பேட்ஸ்டோவ் ஓப்பனிங் செய்தார். பேட்ஸ்டோவ் 3வது ஓவரிலேயே தனது விக்கெட்களை பறிகொடுத்து வெறும் 1 ரன்னில் நடையைக் கட்டினார். பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தாலும், அதன்பின் ஷிகர் தவானுடன் கூட்டணி சேர்ந்தார் பனுகா ராஜபக்சே. இருவரும் சேர்ந்து அதிரடியாக அதேநேரம் பொறுமையுடனும் ரன்கள் சேர்த்தனர். இந்த கூட்டணி 87 ரன்கள் சேர்த்தது. 12வது ஓவரில் தான் இவர்கள் இணையை பெர்குசன் பிரித்தார்.
பனுகா ராஜபக்சே 40 ரன்களில் பெர்குசன் பந்தில் அவுட் ஆக, அடுத்து லிவிங்ஸ்டோனும் ஷிகர் தவானும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். லிவிங்ஸ்டோன் கடைசி நேரத்தில் 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். அவர் அடித்த 3 சிக்ஸரில் ஒன்று 117 மீட்டர் சென்றது. இந்த சீசனில் அதிகதூரம் சென்ற சிக்ஸரில் இது முதல் இடம் பிடித்தது. அதேபோல், ஓப்பனிங் இறங்கி இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்த ஷிகர் தவான் 62 ரன்கள் எடுத்தார். இறுதியில் 16 ஓவர்கள் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.