இந்திய அணியில் தேர்வாகாதது வருத்தமே: ஹர்பஜன் சிங்

இந்திய அணியில் தேர்வாகாதது வருத்தமே: ஹர்பஜன் சிங்
Updated on
1 min read

நன்றாக விளையாடியும் தொடர்ந்து அணிக்கு தேர்வாகாமல் இருப்பது தன்னை காயப்படுத்தியுள்ளது என்றும், ஆனால் இந்தப் புறக்கணிப்பு தனது உற்சாகத்தை முடக்கவில்லை, மீண்டும் இந்திய அணியில் இடம்பெற முயற்சிப்பேன் என்றும் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில், 14 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகல் வீழ்த்தி, சராசரியாக ஒரு ஓவருக்கு 6.47 ரன்கள் மட்டுமே அளித்துள்ளார் ஹர்பஜன். இது சுனில் நரைன் மற்றும் அக்‌ஷர் படேலைத் தொடர்ந்து மூன்றாவது சிறந்த சராசரி ஆகும்.

முக்கியமாக மற்ற சுழற்பந்து வீச்சாளர்கள் துவக்க வீரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஹர்பஜன் மேக்ஸ்வெல், கிறிஸ் கெயில் போன்ற பேட்ஸ்மென்களை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

இது பற்றி பேசுகையில், "நான் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறேன். ஆம், இந்திய அணிக்கு தேர்வாகாதது என்னைக் காயப்படுத்துகிறது. ஆனால் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் எனது ஆட்டத்தை அனைவரும் பார்த்திருப்பார்கள். மற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை விட நான் சிறப்பாக பந்து வீசியுள்ளேன். அணித் தேர்வு எனது கையில் இல்லை. இப்படி புறக்கணிப்பது என்னைக் காயப்படுத்தலாம், ஆனால் அணியில் மீண்டும் இடம்பெறும் எனது முயற்சியை அது தடுக்காது.

எனது பணி பந்துவீசி, விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியை வெற்றி பெறச் செய்வதே. அதை என்னால் இயன்ற வரையில் செய்து வருகிறேன். அதைத் தாண்டி நான் எதையும் யோசிக்கத் தேவையில்லை. எனக்கு வயது உள்ளது. கண்டிப்பாக இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவேன் என்ற நம்பிக்கையும் உள்ளது" என்றார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் இதுவரை 700 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in