Published : 24 May 2016 06:53 PM
Last Updated : 24 May 2016 06:53 PM

அணித்தேர்வாளர்களை ஜோக்கர்கள் என்று அமர்நாத் சாடியது சரிதான்: வினோத் காம்பிளி காட்டம்

இந்திய அணித்தேர்வு குறித்து முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்பிளி காட்டமான ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.

நேற்று இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஒருநாள் அணியில் சுமார் 17 முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. டெஸ்ட் அணியில் புஜாரா, சஹா, ஜடேஜாவைத் தேர்வு செய்ததை வினோத் காம்பிளி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் வினோத் காம்பிளி தனது தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது:

மும்பை அணி ரஞ்சி சாம்பியன். ஆனால் டெஸ்ட் அணியில் ரோஹித், ரஹானே தவிர ஒரேயொரு மும்பை வீரருக்குத்தான் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது, ஏன் ஷ்ரேயஸ் ஐயர், ஆதித்யா தாரே ஆகியோரை தேர்வு செய்யவில்லை.

ஐயர், ஆதித்யா தாரே உள்ளூர் போட்டிகளில் அபாரமாக ஆடியுள்ளனர். உள்நாட்டு போட்டிகளை வைத்துதான் தேர்வு செய்ய வேண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டை வைத்து அணித்தேர்வு செய்யப்படக்கூடாது. மும்பை வீரர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறவில்லை, பொதுவாக இப்படிப்பட்ட தேர்வுகளினால் வீரர்களின் 6 மாதகால உழைப்பு வீணாகிறது.

தேர்வாளர்களே நீங்கள் தேர்வு செய்த அணியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால்தான் உங்களை மொஹீந்தர் அமர்நாத் ஜோக்கர்கள் என்று வர்ணித்தார்.

நான் அணியில் தேர்வு செய்யப்பட்ட காலத்திலிருந்து, அணியிலிருந்து நீக்கப்பட்ட காலத்திற்கு பிறகும் கூட அணித்தேர்வு என்னை வெறுப்பேற்றுகிறது. பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துள்ளீர்கள்.

எந்த அடிப்படையில் புஜாரா, சஹா, ஜடேஜா அணிக்குள் நுழைந்தனர். புஜாரா, சஹா உள்நாட்டு கிரிக்கெட்டில் சரியாக ஆடவில்லை. அணித்தேர்வு பற்றி தேர்வுக்குழுவுக்கு எந்த யோசனையும் இல்லை. புஜாரா, சஹா, ஜடேஜா 6 வேகப்பந்து வீச்சாளர்கள், இது என்ன தேர்வு, தேர்வுக்குழுவே தயவுகூர்ந்து விளக்குங்கள்.

இவ்வாறு அவர் தொடர் ட்வீட்களில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x