

புது டெல்லி: சர்வதேச கிரிக்கெட்டில் தோனி விளையாடிய கடைசி போட்டி வரை அவருக்கு அணி நிர்வாகத்தின் உறுதுணை இருந்ததாக தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங். அதே நேரத்தில் தங்களுக்கு அத்தகைய உறுதுணை கிடைக்கவில்லை எனவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 2000 முதல் 2017 வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். 304 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகள் மற்றும் 40 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார் யுவராஜ். 2011 உலகக் கோப்பையை (50 ஓவர்) இந்தியா வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தவர். அதிரடி பேட்ஸ்மேன், துடிப்பான ஃபீல்டர், பந்து வீசும் திறனும் படைத்தவர் அவர். இந்நிலையில், தோனிக்கு கிடைத்தது தங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
"2014 டி20 உலகக் கோப்பையின்போது நான் நம்பிக்கையை இழந்திருந்தேன். நான் அணியிலிருந்து கழட்டி விடப்படும் சூழல் நிலவியது. அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு போதிய உறுதுணை கிடைக்கவில்லை. அதுவும் அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் 21 பந்துகள் எதிர்கொண்டு 11 ரன்கள் மட்டுமே நான் எடுத்திருந்தேன். இந்திய அணிக்காக நான் விளையாடுவது அதுவே கடைசி என எல்லோரும் கருதிய நேரம் அது.
அதே நேரத்தில் அணியில் இருந்த சிறந்த வீரர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுக்கப்படவில்லை. ஹர்பஜன், சேவாக், வி.வி.எஸ்.லட்சுமண், கவுதம் கம்பீர் போன்ற வீரர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
ஆனால், தோனிக்கு உரிய உறுதுணை கிடைத்தது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி போட்டி ஆடும் வரை அந்த ஆதரவு இருந்தது. அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் உறுதுணை அது. அவரை 2019 உலகக் கோப்பை தொடருக்கு அழைத்துச் சென்றார்கள். அதனால் இந்த விஷயத்தில் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி" என தெரிவித்துள்ளார் யுவராஜ். இவை அனைத்தும் 2011-க்கு பிறகு நடந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.