

மும்பை: உணவு டெலிவரி செய்து வரும் ஸ்விகி நிறுவனத்தை வாங்கி விடுங்கள் என எலான் மஸ்கிற்கு ட்வீட் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில். நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் வாங்க உள்ளார். இந்த செய்தி உலகளவில் வைரலானது. தொடர்ந்து அவர் கோகோ கோலா நிறுவனத்தை வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அவரிடம் ஸ்விகி நிறுவனத்தை வாங்கி விடுமாறு கோரிக்கை வைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில். அதற்கான காரணத்தையும் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் கில்.
"எலான் மஸ்க், தயவுசெய்து ஸ்விகியை வாங்கிவிடுங்கள். அதனால் அவர்கள் சரியான நேரத்தில் விரைவாக டெலிவரி செய்வார்கள்" என தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார் கில். அதனை கவனித்த ஸ்விகி நிறுவனம், தங்களுக்கு நேரடியாக மெசேஜ் செய்யுமாறு ரீ-ட்வீட் செய்தது. தொடர்ந்து கில் தங்களுக்கு மெசேஜ் செய்ததாகவும் ஸ்விகி பின்னர் தெரிவித்தது.
அதனை கவனித்த ட்விட்டர் பயனர்கள் பலரும் அது குறித்து தங்கள் கருத்துகளை சொல்லி இருந்தனர். 'நீங்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் பேட் செய்வதைவிட துரிதமாக நாங்கள் டெலிவரி செய்து வருகிறோம்', 'போக்குவரத்து நெரிசல் காரணமாக டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்படலாம்', 'துரித டெலிவரிக்கு சாலையை தான் வாங்க வேண்டும்', 'பேசாமல் நீங்கள் ஒரு வார காலம் டெலிவரி பாயாக வேலை செய்யுங்கள்' என்பது மாதிரியான கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.