IPL 2022 | ரோகித் மனதளவில் உடைந்து போயுள்ளார் - இயன் பிஷப்

IPL 2022 | ரோகித் மனதளவில் உடைந்து போயுள்ளார் - இயன் பிஷப்
Updated on
1 min read

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மனதளவில் உடைந்துபோயுள்ளார் என்பதை அவருடன் பேசியதன் மூலம் தன்னால் புரிந்துகொள்ள முடிந்ததாக தெரிவித்துள்ளார் இயன் பிஷப்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. விளையாடிய எட்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. அணியின் பிரதான வீரர்கள் சோபிக்க தவறியதே மும்பையின் இந்த மோசமான நிலைக்கு காரணமாக உள்ளது. பவுலிங், பேட்டிங் என எதுவுமே மும்பை அணிக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப்.

"மும்பை அணி கடைசியாக விளையாடிய போட்டி முடிந்த பிறகு அந்த அணியின் கேப்டன் ரோகித் உடன் நான் பேசியிருந்தேன். அவர் உடைந்து போயுள்ளார் என்பதை என்னால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. சிறந்த வீரர்கள் கொண்ட ஒரு அணியை கட்டமைத்துள்ளனர் அதன் உரிமையாளர்கள். அதனால் அவர்கள் வெற்றிப் பாதைக்கு திரும்ப சிறு மாற்றங்கள் மட்டும் போதும் என நான் நினைக்கிறேன்.

அவர்களுக்கு ஸ்பெஷலிஸ்ட் வீரர் ஒருவர் தேவைப்படுகிறார். குறிப்பாக அவர்களது பேட்டிங் லைன் அப்பில் இந்த மாற்றம் தேவை. அதன் மூலம் அவர்களது அணி வலு பெறும். என்னை பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக தான் விளையாடி வருகிறார். அது தவிர நடப்பு சீசனில் ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் அவர்களது பவுலர்கள் அதிக ரன்களை லீக் செய்து விடுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான். இதிலிருந்து மீண்டு அவர்கள் எப்படி முன்னோக்கி நகர்கிறார்கள் என்பதை பார்க்கலாம்" என தெரிவித்துள்ளார் பிஷப்.

இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். மும்பை அணி தற்போது புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in