

மும்பை: ஐபிஎல் 15-வது சீசனின் 41-வது லீக் ஆட்டம் மும்பை வான்ஹடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
கொல்கத்தா அணியில் ஷிரேயஸ் 42, நிதிஷ் ராணா 57, ரிங்கு சிங் 23 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணியின் குல்தீப் 4, முஸ்டாபிசுர் 3 விக்கெட்கள் சாய்த்தனர். டெல்லி அணி சார்பில் வார்னர் 42, லலித் 22 ரன்கள் சேர்த்தனர். இறுதிக் கட்டத்தில் அக்சர் பட்டேல் 24, ரோவ்மேன் பாவெல் 33, ஷர்துல் 8 ரன்கள் எடுத்து வெற்றி தேடித் தந்தனர்.
வெற்றி குறித்து டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் கூறும்போது, ‘‘நாங்கள் நடு ஓவர்களில் அதிக விக்கெட் இழந்தோம். ஆனாலும், அந்த நேரத்தில் அதிகமான ரன்கள்தேவைப்படாததால் இலக்கை கடந்து விட முடியும் என்பதை அறிந்திருந்தோம். ரோவ் மேன்பாவெல் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவராக பார்க்கிறோம். அந்தப் பணியை அவர் நன்றாகவே செய்துள்ளார்’’ என்றார்.
கொல்கத்தா அணி கேப்டன் ஷிரேயஸ் ஐயர் கூறும்போது, “இந்தப் போட்டியில் நாங்கள் ஆட்டத்தை மெதுவாகவே தொடங்கினோம். மளமளவென விக்கெட்டுகளையும் இழந்தோம். இந்தப் போட்டியில் எங்கே தவறு செய்தோம் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். எங்களுக்கு இதுவரை சரியான தொடக்க ஜோடி அமையவில்லை.
இனி வரும் ஆட்டங்களில் நாங்கள் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அதீத நம்பிக்கையுடன் நாங்கள் இருக்க வேண்டிய நேரம் இது” என்றார்.
| இன்றைய ஆட்டங்கள் குஜராத் - பெங்களூரு நேரம்: மாலை 3.30 ராஜஸ்தான் - மும்பை நேரம்: இரவு 7.30 நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் |