

மும்பை: டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த், தோனியின் மெய்யான ரசிகனாக இருந்தால், அவரிடமிருந்து கடைசி வரை களத்தில் நின்று ஆடும் கலையை தவறாமல் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்.
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் 7 போட்டிகளில் டெல்லி அணி மூன்று வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. தற்போது கொல்கத்தா அணியுடன் விளையாடி வருகிறது டெல்லி. நோ-பால் சர்ச்சை, கரோனா தொற்று பரவல் அபாயம் மாதிரியானவற்றை கடந்து வந்துள்ளது டெல்லி அணி. அதனால், லீக் போட்டிகளின் இரண்டாவது பாதி ஆட்டங்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழலில் உள்ளது.
இந்நிலையில், டெல்லி அணி நடப்பு சீசனில் எதிர்கொண்டு வரும் சிக்கல் ஒன்றுக்கு தீர்வு காணும் வகையில் யோசனை சொல்லியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்.
"டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பந்த் மிகவும் முக்கியமான வீரர். அந்த அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினாலும் பந்த் ரன் சேர்க்க வேண்டியது அவசியம். கடைசி ஓவர் வரை பந்த் களத்தில் இருந்தால் அந்த ஓவரில் 20 முதல் 25 ரன்களை அவரால் சேர்க்க முடியும்.
அதனால்தான் இதனை சொல்கிறேன். தோனியின் மெய்யான ரசிகனாக பந்த் இருந்தால், அவரிடமிருந்து கடைசி வரை களத்தில் நின்று ஆடும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும். பந்த், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதனால் அவர் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்" என சேவாக் தெரிவித்துள்ளார்.