'கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர் நான் தான் என நம்புகிறேன்' - முகமது சாலா

முகமது சாலா.
முகமது சாலா.
Updated on
1 min read

ஆன்ஃபீல்ட்: கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர் நான்தான் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் எகிப்து நாட்டு கால்பந்து வீரர் முகமது சாலா. 2021 - 22 பிரீமியர் லீக் தொடரில் அதிக கோல்களை பதிவு செய்துள்ள வீரரும் அவர் தான்.

29 வயதான சாலா, கடந்த 2017 முதல் லிவர்பூல் கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரையில் அந்த அணிக்காக 117 கோல்களை அவர் பதிவு செய்துள்ளார். நடப்பு சாம்பியன்ஸ் லீக் தொடரில் 8 கோல்களை பதிவு செய்துள்ளார். இது தவிர லிவர்பூல் அணி நடப்பு சீசனில் கோல் பதிவு செய்ய 13 முறை உறுதுணையாக இருந்துள்ளார் சாலா. இந்நிலையில், உலகின் சிறந்த வீரர் என அவர் தன்னை சொல்லியுள்ளார்.

"நான் அவரை விடவும் சிறந்தவர். இவரை விடவும் சிறந்தவர் என யாரையும் ஒப்பிட்டு சொல்ல மாட்டேன். என்னை பொறுத்தவரையில் நான்தான் சிறந்த வீரர் என நினைக்கிறேன். நான் இதை எப்போதும் சொல்வேன். எனக்கு நான்தான் பெஸ்ட். அதே நேரத்தில் மற்ற வீரர்களுக்கும் நான் மதிப்பு கொடுப்பேன்.

பாலன் டி'ஓர் விருதை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். சாம்பியன்ஸ் லீக் மற்றும் பிரிமீயர் லீக் என இரண்டு பைனலிலும் வெல்ல வேண்டும். அதனை ரெண்டு, மூன்று, நான்கு முறை நான் வெல்ல வேண்டும். நாம் காண விரும்பும் கனவினை காணலாம், அடைய விரும்பும் இலக்கையும் அடையலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்று கால்பந்து உலகில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் பாலன் டி'ஓர் விருதை கொடுத்து வருகிறது. அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, கடந்த ஆண்டு உட்பட இதனை 7 முறை வென்றுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in