

ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் புனே அணி வீழ்த்தியது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. கேப்டன் முரளி விஜய் 41 பந்தில், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 59 ரன்னும், குர்கீரத் மான் சிங் 30 பந்தில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 51 ரன்னும் சேர்த்தனர். புனே தரப்பில் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 34 ரன்களுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார்.
173 ரன்கள் இலக்குடன் விளையாடிய புனே அணியில் ரஹானே 19, உஸ்மான் கவாஜா 30, ஜார்ஜ் பெய்லி 9, சவுரப் திவாரி 17, இர்பதான் 2, திஷாரா பெரேரா 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. அக்ஸர் படேல் வீசிய இந்த ஓவரை கேப்டன் தோனி எதிர்கொண்டார்.
முதல் பந்தில் ரன் சேர்க்கப்பட வில்லை. அடுத்த பந்து அகலப்பந்தானது. 2-வது பந்தில் சிக்ஸரும், 3-வது பந்தில் இரு ரன்களும் சேர்க்கப்பட்டது. கடைசி 3 பந்தில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-வது பவுண்டரிக்கு விரட்டிய தோனி, கடைசி இரு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
தோனிக்கு ஆஃப் ஸ்டம்புக்கு நன்றாக வெளியே வீசினால் அவரால் பவுண்டரி அடிக்க முடியாது என்று நிரூபிக்கப்பட்ட ஒன்றான நிலையில் அக்சர் படேல் தோனிக்கு பிடித்தமான அவரது பழைய இடங்களிலேயே வீசியது மங்கும் நட்சத்திரம் தோனிக்குச் சாதகமானது.
மேலும், வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி இல்லை, அழுத்தம் இல்லை, இத்தருணங்களில் பிக் ஷாட்கள் கைகூடுவது பெரிய விஷயமில்லை. ஆனாலும் கடைசியில் அடித்த சிக்ஸ் உண்மையில் தோனி உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தை நினைவுபடுத்துமாறு அமைந்தது.
முடிவில் புனே அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி 32 பந்தில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்த புனே அணி ஆறுதல் வெற்றியுடன் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்த திருப்தியுடன் விடை பெற்றது.