

பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளினால் அங்கிருந்து புலம் பெயந்து வந்துள்ள அகதிகளுக்கு நிதியுதவி செய்யும் நோக்கத்திற்காக இருபது ஓவர் கிரிக்கெட் ஒன்றை நடத்தி நிதி திரட்ட பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி ஆலோசனை செய்து வருகிறார்.
பாகிஸ்தான் - ஆப்கான் எல்லையில் உள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் தலிபான் மற்றும் பிற தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடுத்து வருவதால் அங்கிருக்கும் பழங்குடியினர் உட்பட சுமார் 470,000 பேர் அகதிகளாக மாறியுள்ளனர்.
பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் பிறந்த ஷாகித் அஃப்ரீடி அகதிகளுக்கு நிதி திரட்டும் முடிவில் திட்டவட்டமாக இறங்கியுள்ளார்.
”நான் இதற்காக அதிகாரிகளுடன் பேசி வருகிறேன், லாகூரில் இருபது ஓவர் கிரிக்கெட் ஒன்றை நடத்தி அவர்களுக்கு உதவும் பொருட்டு நிதி திரட்ட ஆலோசனை செய்து வருகிறேன்” என்றார். கராச்சியில் தாய்மார்களுக்கும் உள்நாட்டு அகதிகளுக்குமான தன் சொந்த அறக்கட்டளைத் திறப்பு விழாவில் அஃப்ரீடி இவ்வாறு பேசியுள்ளார்.
மேலும் ராணுவ நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட, கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள டங்கி பந்தா என்ற கிராமத்தில் 16 படுக்கைகள் கொண்ட மகப்பேறு மருத்துவமனை ஒன்றிற்கு வேலைகள் தொடங்கியுள்ளதாகவும் அஃப்ரீடி தெரிவித்தார். இது இவரது சொந்த செலவில் உருவாக்கப்படும் மருத்துவமனையாகும்.
”நான் என்னுடைய மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன்” என்றார் அப்ரீடி.
1,60,000 அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்படும் இந்த மருத்துவமனைக்கு அஃப்ரீடியின் தந்தையான ஃபஸ்லூர் ரெஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையைக் கட்டி சேவை செய்யும் மனப்பான்மையை உருவாக்கியவர் இம்ரான் கான் என்று கூறினார் அஃப்ரீடி. இம்ரான் கான் எங்களுக்கு முன்னோடியும் உதாரணமும் ஆவார் என்கிறார் அஃப்ரீடி.
அறக்கட்டளை துவங்கிய எண்ணமும் இளைஞர்களை கல்வி மற்றும் விளையாட்டுப்பக்கம் திருப்பவே, தீவிரவாதம் என்ற ஒன்றிலிருந்து அவர்களை நல்வழிக்குத் திருப்பவேண்டும் என்பதற்காகவே என்கிறார் அஃப்ரீடி.
”பழங்குடியினர் பகுதிகளில் இளைஞர்களுக்குக் கல்வி இல்லை, ஆகவே யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதை மாற்றி தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட எதிர்மறை வேலைகளுக்குப் பயன்படுத்தி விடுவார்கள். ஆகவே அவர்களுக்குக் கல்வியூட்டுவது தேசத்திற்குச் செய்யும் கடமையாகும்” என்று கூறியுள்ளார் அஃப்ரீடி.
விளையாட்டு வீரர்கள் பொதுவாக விளையாட்டை வளர்க்கிறேன், பயிற்சி அளிக்கிறேன் என்று செல்வது வழக்கம். ஆனால் சொந்த நாட்டின் அரசு நிர்கதியாக நடுத்தெருவில் நிறுத்திய மக்களுக்காக சேவை செய்ய நினைப்பது ஒரு அரிய செயல். இந்த விதத்தில் அஃப்ரீடி ஒரு முன்னோடியாகவே திகழ்கிறார்.