Last Updated : 27 Apr, 2022 07:50 AM

 

Published : 27 Apr 2022 07:50 AM
Last Updated : 27 Apr 2022 07:50 AM

பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்த டிகே

தினேஷ் கார்த்திக், தீபிகா பல்லிகல்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் எதிரணியின் பந்துகளை சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் விளாசி அதிசயிக்க வைத்து வருகிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ‘டிகே’ என சுருக்கமாக அழைக்கப்படும் தினேஷ் கார்த்திக். சொந்த வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் வாழ்க்கையிலும் சரி, தினேஷ் கார்த்திக் சந்திக்காத சரிவுகளே இல்லை. 2004-ல் சர்வதேச கிரிக்கெட் டில் அறிமுகமான தினேஷ் கார்த்திக் இதுவரை தனது இடத்தை அணியில் தக்க வைக்க முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க 2007-ல் அவருக்கு திருமணம் ஆனது. ஆனால் சில வருடங்களிலேயே திருமண பந்தத்தில் முறிவு ஏற்பட்டது.

இது அவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்த ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் ரஞ்சி கோப்பையில் தமிழக அணியின் கேப்டன் பதவியை இழந்தார். தன்னை சுற்றியுள்ள சூழல் எதிர்மறையாக உருவெடுக்க உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்வதைகூட நிறுத்தினார். இதைக் கண்ட அவருடைய பயிற்றுனர், தினேஷ் கார்த்திக்கின் வீட்டிற்கே நேரடியாக சென்று, மனக்குழப்பத்தில் இருந்து மீண்டுவர உத்வேகம் அளித்தார்.

தினேஷ் கார்த்திக்கை வற்புறுத்தி உடற்பயிற்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் தினேஷ் கார்த்திக்கிற்கு அறிமுகமானார். தினேஷ் கார்த்திக்கின் நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீபிகா, பயிற்றுடனருடன் இணைந்து தினேஷ் கார்த்திக்கிற்கு ஆலோசனை வழங்கத் தொடங்கினார். இதனால், புத்துயிர் பெற்ற தினேஷ் கார்த்திக், மனச்சோர்வில் இருந்து மீண்டு பயிற்சியைத் தொடங்கினார்.

தீபிகா ஊக்கத்தால் எழுச்சி பெற்ற தினேஷ் கார்த்திக் வலை பயிற்சியை தொடங்கினார். தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் வேட்டையாடினார். இதன் பலனாக 2013-ல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார். தொடர்ந்து தனது வாழ்க்கையை கட்டமைக்க உதவிய தீபிகாவை கரம் பிடித்தார் தினேஷ் கார்த்திக்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதற்கிடையே விக்கெட் கீப்பராக இந்திய அணியில் ரிஷப் பந்த் வேரூன்ற தொடங்கினார். அதேவேளையில் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார்.

சோதனைகள் பல துரத்தினாலும் சோர்ந்துவிடாமல் தனது பயிற்சி முறைகளை மேலும் கடினமாக்கினார். இதற்கிடையே தீபிகா, இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார். இதனால் பெற்றோராக இருவரும் கூடுதல் பொறுப்பை உணர்ந்தனர். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தனர். தீபிகாவும் பழைய பார்மிற்கு திரும்பினார்.

ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் பெங்களூரு அணிக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 8 ஆட்டங்களில் விளையாடி முறையே 32*(13 பந்துகள்), 14*(7), 44*(23), 7*(2), 34(14), 66*(34),13*(8) ரன்கள் விளாசியுள்ளார். (ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் நீங்கலாக) ஹைதராபாத் அணிக்கு எதிராக மட்டும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மேலும் 6 ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். பல ஆட்டங்களில் சிறப்பான முறையில் இன்னிங்ஸை முடித்துக் கொடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 200 ஆக உள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ், 360 டிகிரி பேட்ஸ்மேன் என தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்துள்ளார். 36 வயதான தினேஷ் கார்த்திக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி வர்ணனையாளராக பார்த்தேன். அப்போது அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே கருதினேன். ஆனால் இப்போது அவர், மட்டையை சுழற்றுவதை பார்த்தால் நானே மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உதிக்கிறது என்றும் சிலாகித்தார் டிவில்லியர்ஸ்.

மறுமுனையில் தீபிகாவோ குழந்தை பெற்று 6 மாதங்களே ஆன நிலையில் கிளாஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் போட்டியில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். தினேஷ் கார்த்திக் தற்போதுள்ள பார்மினால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறுவதற்கான கதவுகள் திறக்கக்கூடும். இதற்கு தகுந்தவாறு தேர்வுக்குழு உறுப்பினரும் கருத்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x