Published : 16 Jun 2014 11:34 PM
Last Updated : 16 Jun 2014 11:34 PM

ரொனால்டோ ஏமாற்றம்; தாமஸ் முல்லர் ஹேட்ரிக்; ஜெர்மனி அதிரடி வெற்றி

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் இன்று ஜெர்மனி அணி போர்ச்சுக்கல் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஹேட்ரிக் கோல்களை அடித்தார்.

தொடக்கத்தில் ஜெர்மனியின் ஆதிக்கம் இருந்தது. ஜெர்மன் வரிசையில் தாமஸ் முல்லர் முன்னிலையில் நிறுத்தப்பட்டுள்ளார். போர்ச்சுக்கல் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இப்போதைக்கு இடது பக்கம் களமிறக்கப்பட்டுள்ளார்.

2வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் போடெங் அருமையாக பந்தை தாமஸ் முல்லரிடம் அளிக்கிறார். பெபே அதனை தலையால் முட்டி வெளியே தள்ள ஜெர்மனிக்கு த்ரோ வாய்ப்பு கிடைத்தது. பிறகு கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் ஒன்றும் பயனில்லை.

3வது நிமிடத்திலும் ஜெர்மனி வீரர் குரூஸ் போர்ச்சுக்கலிடமிருந்து பந்தை பிடுங்கிச் சென்று முன்னேறினார். பந்து இடதுபுறத்தில் இருந்த மரியோ கோயெட்சேயிடம் அடிக்கப்படுகிறது. அவர் போர்ச்சுகல் வீரர் ஜோ பெரைராவை ஏமாற்றி பந்தை அடிக்க முற்படும்போது போர்ச்சுகல் தடுப்பு வீரர் பந்தை தன் வசம் கொண்டு வந்தார்.

4வது நிமிடத்தில் இடது புறம் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியே வந்தார். அவர் ஒரு அருமையான பாஸை சக வீரர் ஹியூகோ அல்மெய்டாவுக்கு அடிக்க அவரோ அபாரமாக எடுத்துச் சென்று முன்னேறினார் ஜெர்மனி பெனால்டி அருகே வந்து கோலை நோக்கி ஒரு ஷாட்டை அடிக்க அதில் சக்தி இல்லை அதனை ஜெர்மன் கோல் கீப்பர் மேனுயெல் நியூயர் எளிதாகப் பிடித்து விடுகிறார்.

6வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு ஷாட் வாய்ப்பு கிடைத்தது. அதனை கோல் கீப்பர் அடிக்க அந்தப் பந்தை போர்ச்சுகல் வீரர் ஃபேபியோ கோயெண்ட்ராவோ வென்று இடது புறமாக எடுத்துச் சென்று ரொனால்டோவுக்கு அடிக்கிறார். ரொனால்டோ விறுவிறுவென பந்தை எடுத்துச் சென்று 30 யார்டிலிருந்து ஜெர்மன் கோல் நோக்கி அடிக்க பந்து மேலேயும், வைடாகவும் சென்றது. கோல் முயற்சி வீண்.8வது நிமிடத்திலும் கிறிஸ்டியானோ ரொனால்டோ விறுவிறுவென முன்னேறி கோலை நோக்கி அடிக்க நேராக ஜெர்மனி கோல் கீப்பர் கைகளுக்குச் செல்கிறது. அவர் பாஸ் செய்திருக்கவேண்டும் ஆனால் செய்யவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் பந்தை எடுத்துச் சென்றிருக்கலாம்.

இப்போது இருதரப்பிலும் ஆட்டமும் உணர்வும் சூடு பிடிக்க 12வது நிமிடத்தில் ஜெர்மனி கோலை நோக்கி முன்னேற போர்ச்சுகல் வீரர் தவறிழைக்கிறார். அதாவது அன்று குரேஷியா செய்த அதே தவறுதான். ஜெர்மனி வீர்ர் மரியோ கொயெட்சே பந்தை எடுத்து கொண்டு பெனால்டி பகுதியில் முன்னேற போர்ச்சுகல் வீரர் ஜோ பெரைரா அவரை முன்னேற விடாமல் தள்ளுகிறார். உடனே பெனால்டி கிக் என்ற விசில் ஊதப்படுகிறது. மேலும் நடுவர் ஜோ பெரைராவுக்கு மஞ்சள் அட்டைக் காண்பித்து எச்சரிக்க நடுவரைச் சுற்றி போர்ச்சுக்கல் வீரர்கள் மொய்த்து வாக்குவாதம் புரிந்தனர்.

பெனால்டி கிக்கை தாமஸ் முல்லர் எடுத்து கொண்டார். இடது புற மூலையில் கோல் வலைக்குள் செலுத்துகிறார் ஜெர்மனி 1-0 என்று முன்னிலை வகித்தது. இன்னும் கறாரான நடுவராக இருந்திருந்தால் போர்ச்சுகல் வீரர் ஜோ பெரைராவுக்கு சிகப்பு அட்டைக் காண்பித்து வெளியேற்றிருப்பார்.

ஆனால் அதுதான் பிறகு நடந்தது. அதற்கு முன்னதாக ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைக்கிறது. கார்னர் ஷாட் அடித்த ஜெர்மனி வீரர் மிகத் துல்லியமாக அதனை கோலுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஹம்மல்ஸ் அருகே தூக்கி அடிக்க அவர் போர்ச்சுகல் வீரர் பெபேயைக் காட்டிலும் மேலும் எம்பி மிகத் துல்லியமாக் தலையால் முட்ட பந்து கோல் வலைக்குள் சென்றது. கோல் கீப்பர் ஒன்றும் செய்ய முடியாது. அவர் தலைக்கு மேல் கோலுக்குள் பந்து செல்வதை இயலாமையுடன் அவர் பார்க்க நேரிட்டது. ஜெர்மனி 2-0 என்று முன்னிலை வகித்தது.

அதன் பிறகுதான் 37வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விரும்பத் தகாத செயலும் கூட. ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஒரு பந்தை எடுத்துக் கொண்டு வேகமாக போர்ச்சுகல் கோல் நோக்கி முன்னேற இந்த முறை பெபே அவரைப் பிடித்துத் தள்ளியே விடுகிறார். அது மட்டுமல்ல பல்லில் அடிபட்டது போல் முல்லர் தரையில் உட்கார்ந்து முகவாயைப் பிடித்துக் கொண்டிருக்கும்போது பெபே அவர் அருகில் சென்று அவர் தலையோடு தன் தலையைக் கொண்டு போய் அச்சுறுத்துகிறார். இது நடுவர் கவனத்திற்கு வர உடனே ரெட் கார்ட் காண்பிக்கப்பட்டு பெபே வெளியேற்றப்படுகிறார்.

ஆனால் உண்மையில் முல்லர் மார்பைப் பிடித்தே தள்ளினார் பெபே, முல்லர் கொஞ்சம் அதிகமாகவே நடிக்க அதில் பெபே கடுப்பாகியிருக்கலாம். அதனால் பக்கத்தில் சென்று தன் தலையால் அவர் தலையை முட்டினாரா அல்லது பதித்தாரா என்று தெரியவில்லை.

10 வீரர்களாகக் குறைந்து போன போர்ச்சுக்கல் ஒரு பலமான டிஃபெண்டரை இழந்த நிலையில் தாமஸ் முல்லர் தனது 2வது கோலை அடித்து ஜெர்மனிக்கு 3-0 என்று இடைவேளையின் போது முன்னிலை பெற்றுத் தந்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ கடுமையான ஏமாற்றத்துடன் தலையைத் தொங்கப்போட்டபடி ஓய்வறைக்குச் செல்கிறார்.இடைவேளைக்குப் பிறகு போர்ச்சுகல் உற்சாகமிழந்தே காணப்பட்டது. அவ்வப்போது கார்னர் வாய்ப்புகள் கிடைத்தாலும் கோல் வரவேயில்லை. ரொனால்டோவே ஒரு ப்ரீ கிக் மற்றும் கார்னர் ஷாட்டில் சொதப்பினார். ஜெர்மனி தொடர்ந்து போர்ச்சுகல் கோல் கீப்பருக்கு நெருக்கடி கொடுத்தது.

ஆட்டம் மீண்டும் 68வது நிமிடத்திலிருந்து சூடு பிடித்தது. அந்த நிமிடம் கிடைத்த வாய்ப்பை ஜெர்மனி விரயம் செய்தது. பிறகு 70வது நிமிடத்தில் 4வது கோல் அடிக்க மிக அருகில் வந்து பயனில்லாமல் போனது. ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் 4வது கோல் உண்டு என்றே தெரிந்தது.

இந்த நிலையில் 78வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ஆந்த்ரே ஷர்லி வலது புறத்திலிருந்து போர்ச்சுகல் கோல் அருகே நின்றிருந்த தாமஸ் முல்லருக்குத் துல்லியமாக ஒரு பாஸை அடிக்க அதனை முல்லர் கோலுக்கு அருகில் நின்று கொண்டு கோலாக மாற்றுகிறார். ஜெர்மனி 4-0 என்று முன்னிலை பெற்றது. தாமஸ் முல்லர் இந்த உலகக் கோப்பையின் முதல் ஹேட்ரிக்கை அடித்து சாதனை புரிந்துள்ளார்.

அவரது 50வது போட்டியாகும் இது. இதில் அவர் தனது 20வது கோலை அடித்தார். 85வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு ஒர் ப்ரீகிக் கிடைக்கிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோ சொத்தை ஷாட்டை நேராக ஜெர்மனி வீரர் காலுக்கே அடிக்கிறார். பிறகு 90 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஃப்ரீ கிக் கிடைக்கிறது ரொனால்டோ இந்த முறை சக்தி வாய்ந்த ஒரு ஷாட்டை ஜெர்மன் கோல் நோக்கி அடிக்க அதனை ஜெர்மனி கோல் கீப்பர் அபாரமாகத் தடுக்கிறார்.

இறுதி விசில் ஊதப்படுகிறது. ஜெர்மனி 4-0 என்று வெற்றி பெற்று 3 புள்ளிகளை அள்ளியது. தாமஸ் முல்லரின் முதல் ஹேட்ரிக் இன்றைய சிறப்பம்சமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x