

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வி கண்டது.
145 ரன்கள் என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு இம்முறை பாப் டு பிளஸிஸ் உடன் விராட் கோலி ஓப்பனிங் செய்தார். கடந்த இரண்டு போட்டிகளாக டக் அவுட் ஆன கோலி இம்முறை 9 ரன்களில் நடையைக்கட்டினார். இதன்பின் வந்த ராஜத் படிதார் உடன் இணைந்த டு பிளஸிஸ் சில ஓவர்களே தாக்குப்பிடித்தார். டு பிளஸிஸ் 23 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் சென் ஓவரில் அவுட் ஆனார்.
டு பிளஸிஸ் வெளியேறிய பின் வந்த அனைத்து வீரர்களும் வருவதும் போவதாக இருந்தனர். மேக்ஸ்வெல் டக் அவுட் ஆக, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்தனர். இதனால் 13ஓவரிலேயே 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது பெங்களூரு அணி. ஷாபாஸ் அகமது மற்றும் வணிந்து ஹஸரங்கா இருவரும் சில ஓவர்கள் தாக்குப்பிடித்தாலும் அவர்களிலும் வெற்றி இலக்கை நெருங்க முடியவில்லை. இதனால் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பெங்களூரு அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் சென் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், தேவ்தட் படிக்கல் இணை துவக்கம் கொடுத்தது. இருவரும் ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. முதல் ஓவரிலேயே படிக்கல் 7 ரன்களில் வெளியேறினார். 3-வது ஓவரில் 17 ரன்களுடன் அஸ்வினும், 4-வது ஓவரில் 8 ரன்களில் பட்லரும் நடையைக்கட்டினர்.
27 ரன்கள் சேர்த்திருந்த சஞ்சு சாம்சனை 9-வது ஓவரில் வனிந்து ஹசரங்கா போல்டாக்கினார். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அடுத்தடுத்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை. டேரில் மிட்செல் 16 ரன்களுடனும், ஹெட்மேயர் 3 ரன்களுடனும், போல்ட் 5 ரன்களுடனும், பிரஷீத் கிருஷ்ணா 2 ரன்களுடனும் வெளியேறினர். இதில் ரியான் ப்ராக் மட்டும் 31 பந்துகளில் 56 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது.
முஹம்மத் சிராஜ், ஹேசல்வுட், வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.