

மும்பை: 'அவர் ஐபிஎல் கிரிக்கெட்டின் அடையாளம்' என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை புகழ்ந்துள்ளார் இர்பான் பதான். இருவரும் இந்திய அணிக்காக இணைந்து விளையாடியவர்கள்.
நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பை துறந்து, அணியில் அனுபவ வீரராக விளையாடி வருகிறார் தோனி. அவர் மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் இறுதி ஓவரில் நான்கு பந்துகளில் 16 ரன்களை சேர்த்து அசத்தியிருந்தார். அவரது அந்த அதிரடி ஆட்டத்தை பார்த்து இந்நாள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், தற்போது தோனியை புகழ்ந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான்.
"ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த பினிஷராக அறியப்படுபவர் தோனி. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பட்டியலில் வீரர்கள் மாறிக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அவர்களால் தோனியை கடக்க முடியவில்லை. அதனால்தான் சொல்கிறேன் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டின் அடையாளம் என்று. அவர் இதன் தூதுவரும் கூட.
தினேஷ் கார்த்திக், ராகுல் திவாட்டியா, ஹெட்மெயர் மாதிரியான வீரர்கள் நடப்பு சீசனில் பினிஷர் ரோலில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தருகிறார்கள். ஆனால் தோனி அவர்கள் எல்லோருக்கும் முன்னோடியாக திகழ்கிறார்" என தெரிவித்துள்ளார்.
மேலும், "சென்னை அணியை மற்ற அணிகள் லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று. எதிரணியினர் வசம் உள்ள வெற்றியை எப்படி தட்டிப் பறிக்க வேண்டும் என்பதை அறிந்த அணி சிஎஸ்கே" என தெரிவித்துள்ளார் அவர். இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.