மோசமான பந்துவீச்சால் தோற்றோம்: பெங்களூரு வீரர் பின்னி கருத்து

மோசமான பந்துவீச்சால் தோற்றோம்: பெங்களூரு வீரர் பின்னி கருத்து
Updated on
1 min read

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக பெங்களூரு தோற்றது என்று அந்த அணியின் வீரர் ஸ்டூவர்ட் பின்னி கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. அந்த அணியில் கே.எல்.ராகுல் 52 ரன்களையும், விராட் கோலி 52 ரன்களையும், வாட்சன் 34 ரன்களையும் எடுத்தனர். கொல்கத்தா அணியில் மோர்னே மோர்கல், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

வெற்றிபெற 186 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த கொல்கத்தா அணி, 69 ரன்களுக்குள் காம்பீர் (37 ரன்கள்), உத்தப்பா (1 ரன்), லின் (15 ரன்கள்), மணிஷ் பாண்டே (8 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. இருப்பினும் இதன் பிறகு ஆடவந்த யூசுப் பதான் 29 பந்துகளில் 60 ரன்களை விளாசி கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு உதவியாக ரஸ்ஸல் 39 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 10 ரன்களையும் எடுக்க கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 189 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.

இப்போட்டி குறித்து பெங்களூரு அணி வீரர் ஸ்டூவர்ட் பின்னி நிருபர்களிடம் கூறியதாவது:

இன்றைய போட்டியில் எங்கள் பந்துவீச்சு மிகவும் ஏமாற்றம் அளிப் பதாக இருந்தது. முதலில் சில ஓவர்களை சரியாகப் போட்டாலும் அதன்பிறகு பந்துவீச்சில் சொதப்பி விட்டோம். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் தோற்றதற்கு எங்கள் பந்துவீச்சுதான் முக்கிய காரணம்.

இப்போட்டியில் யூசுப் பதானும் ரஸ்ஸலும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். குறிப்பாக ரஸ்ஸல் அடித்த சிக்சர்கள் எங்களிடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டது. இவ்வாறு ஸ்டூவர்ட் பின்னி கூறினார்.

கொல்கத்தாவில் இன்று நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in