

உலான் பத்தூர்: மங்கோலிய நாட்டில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை வென்று குவித்துள்ளனர்.
கடந்த 1979 முதல் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. ஆடவர் மற்றும் மகளிர் என மூன்று பிரிவுகளில் நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு எடை பிரிவுகளில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். முக்கியமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெள்ளி வென்ற ரவி தாஹியா மற்றும் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியாவும் பதக்கம் வென்றுள்ளனர். 19 நாடுகளை சேர்ந்த 250 வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்றுள்ளனர்.
57 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ரவி தாஹியா. 65 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் வெள்ளி வென்றார் பஜ்ரங் புனியா. 70 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார் நவீன். அர்ஜுன், சச்சின், ஹர்ப்ரீத், சுனில் குமார் ஆகியோர் கிரேக்க - ரோமன் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளனர்.
மகளிர் பிரிவில் அன்ஷு மாலிக் மற்றும் ராதிகா ஆகியோர் வெள்ளி வென்றார். சுஷ்மா, சரிதா, மனிஷா ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.