

மும்பை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 'நோ-பால்' விவகாரத்தில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் உட்பட மூவருக்கு அபராதம் விதித்துள்ளது ஐபிஎல்.
நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டெல்லி அணி பேட் செய்தபோது கடைசி ஓவரில் வீசப்பட்ட பந்து, பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேலே சென்றது போல இருந்தது. அதன் காரணமாக டெல்லி அணியினர் 'நோ-பால்' என அறிவிக்குமாறு நடுவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அந்த அணியின் துணை பயிற்சியாளர் பிரவின் ஆம்ரே, களத்திற்குள் வந்து நடுவர்களிடம் இது குறித்து பேசியிருந்தார்.
போட்டி முடிந்ததும் இரு தரப்பிலும் தவறு இருந்ததாக டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் சொல்லியிருந்தார். இந்நிலையில், பந்த் உட்பட மூவருக்கு அபராதம் விதித்துள்ளது ஐபிஎல். இது தொடர்பான அறிக்கையும் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதி 2.7 (லெவல் 2) மீறி செயல்பட்ட காரணத்திற்காக ரிஷப் பந்திற்கு போட்டிக்கான கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே போட்டியில் ஐபிஎல் நடத்தை விதி 2.8-ஐ மீறி செயல்பட்ட காரணத்திற்காக டெல்லி வீரர் ஷர்துல் தாக்கூருக்கு போட்டிக்கான கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், களத்திற்குள் சென்று நடுவர்களுடன் வாதாடிய டெல்லி அணியின் துணைப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு 100 சதவீதம் அபராதமும், ஒரு போட்டியில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஐபிஎல் நடத்தை விதி 2.20-ஐ மீறி செயல்பட்ட காரணத்திற்காக இதனை எதிர்கொண்டுள்ளார்.