IPL | 'நோ-பால்' சர்ச்சை; 2019 சீசனில் களத்தில் ஆங்கிரி பேர்டாக லேண்டான தோனி

நடுவர்களுடன் வாதாடும் தோனி (கோப்புப்படம்).
நடுவர்களுடன் வாதாடும் தோனி (கோப்புப்படம்).
Updated on
1 min read

மும்பை: கடந்த 2019 ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் 'நோ-பால்' தொடர்பான முடிவை அறிந்து ஆவேசமடைந்த சென்னை அணியின் தோனி களத்திற்கே சென்று வாதாடினார். அந்த சம்பவம் தற்போது ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி, தோல்வியை தழுவியது டெல்லி அணி. அந்த அணி பேட் செய்த போது கடைசி ஓவரின் மூன்றாவது பந்து நோ-பால் தானா? என்ற சர்ச்சை எழுந்தது. ஏனெனில் பந்து இடுப்புக்கு மேலே எழும்பி சென்றது போல இருந்தது. ஆனால் கள நடுவர்கள் இருவரும் அது முறையான (லீகல்) பந்து என சொல்லிவிட்டனர். அந்த முடிவை அறிந்து ஆவேசமடைந்தனர் டெல்லி அணியினர். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஆடுகளத்தை விட்டு வெளியே வருமாறு பேட் செய்து கொண்டிருந்த தங்கள் அணி வீரர்களுக்கு சிக்னல் கொடுத்தார்.

தொடர்ந்து தங்கள் அணியின் துணை பயிற்சியாளரை களத்திற்கு அனுப்பினார் பந்த். பயிற்சியாளரும் நடுவர்களுடன் பேசினார். இருந்தும் நடுவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர். இது சர்ச்சையாக வெடித்தது. பந்த் செயலை கண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் கூட செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2019 சீசனில் இதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது. பந்த் போலவே அப்போது நோ-பால் தொடர்பாக முன்னாள் சிஎஸ்கே கேப்டன் தோனியே களத்திற்கு சென்று நடுவர்களுடன் வாதாடினார்.

என்ன நடந்தது? 2019 சீசனின் 25வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. அந்த போட்டியில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை அணி விரட்டியது. கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றிருந்தது. தோனி அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அவுட்டானார். தொடர்ந்து நான்காவது பந்தை எதிர்கொண்டார் சான்ட்னர். அப்போது பந்து அவரது இடுப்புக்கு மேலே சென்றது போல ஃபுல்-டாஸாக வீசப்பட்டது. இருந்தும் நோ-பால் கொடுக்க மறுத்தனர் நடுவர்கள். அதை கண்டு ஆவேசமடைந்த தோனி களத்திற்கு சென்று நடுவர்களுடன் வாதாடினார். ஆனால் நடுவர்கள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.

கடைசி பந்து வரை சென்ற அந்த ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றது சென்னை அணி. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி ஆட்டத்தை இழந்தது. இந்த இரண்டு சம்பவத்திலும் பந்து வீசியது ராஜஸ்தான் அணிதான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in