IPL 2022 | பிரசித் கிருஷ்ணா வேகத்தில் வீழ்ந்த டெல்லி - ராஜஸ்தான் அணி 15 ரன்களில் வெற்றி

IPL 2022 | பிரசித் கிருஷ்ணா வேகத்தில் வீழ்ந்த டெல்லி - ராஜஸ்தான் அணி 15 ரன்களில் வெற்றி
Updated on
2 min read

மும்பை: ஐபிஎல் 15-வது சீசனின் 34-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

223 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஓப்பனிங் செய்த பிரிதிவி ஷா மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக இன்னிங்ஸை துவக்கினர். எனினும், வார்னர் 28 ரன்களில் ஆட்டத்தின் 5வது ஓவரில் வெளியேறினார். அவரின் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணா எடுத்தார். இதன்பின் வந்த சர்ப்ராஸ் கான் 1 ரன்னோடு வந்த வேகத்தில் வெளியேற, 10வது ஓவரின் கடைசி பந்தில் பிரிதிவி ஷாவும் அவுட் ஆனார். அவர் 37 ரன்கள் எடுத்திருந்தார்.

கேப்டன் ரிஷப் பந்த் 44 ரன்கள் மற்றும் லலித் யாதவ் 37 ரன்கள் எடுத்து வெற்றிக்கு நெருக்கமாக அணியை கொண்டு வந்தாலும், அவர்கள் அவுட் ஆன பின் மிடில் ஆர்டரில் விளையாடிய மற்ற வீரர்கள் கைகொடுக்க தவறினார். குறிப்பாக 19வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் உடன் மெய்டன் ஓவராகவும் வீசி அசத்தினார்.

இறுதிக்கட்டத்தில் 6 பந்துகளுக்கு 36 ரன்கள் அதாவது 6 சிக்ஸர்கள் தேவைப்பட்டது. ரோவ்மன் பவல் முதல் 3 பந்துகளையும் சிக்ஸ் அடிக்க ஆட்டத்தில் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டது. 3வது பந்து புல்டாஸாக வர அதையும் சிக்ஸ் அடித்தார். அப்போது டெல்லி வீரர்கள் அந்த பந்தை நோ பாலாக அறிவிக்க சொல்லி ஆட்டத்ஜ்த்திற்கு தடைபடுத்தினர். இதனால் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டம் தொடர்ந்த பின் டெல்லி அணி இலக்கை துரத்த முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட்களை பறிகொடுத்தது. கடைசி பந்தில் ரோவ்மன் பவல் அவுட் ஆகினார். இதனால் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ராஜஸ்தான் தரப்பில் பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டும், அஸ்வின் இரண்டு விக்கெட்டும் எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு ஜாஸ்பட்லர், தேவ்தட் படிக்கல் இணை தொடக்கம் கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை பிரிக்க முடியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.

இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து 155 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். இதனையடுத்து 35 பந்துகளில் 54 ரன்களை சேர்த்த தேவ்தட் படிக்கலை 16-வது ஓவரில் கலீல் அஹமது வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து களத்துக்கு வந்த சஞ்சு சாம்சன் பட்லருடன் கைகோர்த்தார். இருவரும் இணைந்து டெல்லி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தனர். 65 பந்துகளில் 116 ரன்களை குவித்த பட்லர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீசிய 19-வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது. டெல்லி அணி தரப்பில் கலீல் அஹமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in