சவாலான சூழ்நிலைகளில் பந்துவீச விரும்புகிறேன்: கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் விருப்பம்

சவாலான சூழ்நிலைகளில் பந்துவீச விரும்புகிறேன்: கொல்கத்தா வீரர் ரஸ்ஸல் விருப்பம்
Updated on
1 min read

சவாலான சூழ்நிலைகளில் பந்துவீச விரும்புகிறேன் என்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ரஸ்ஸல் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி யின் தொடக்க ஆட்டக்காரர்களான கவுதம் காம்பீரும் (54 ரன்கள்), உத்தப்பாவும் (70 ரன்கள்) முதல் விக்கெட்டுக்கு 101 ரன்களைச் சேர்த் தனர். இவர்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தின் உதவியால் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164 ரன்களை எடுத்தது.

அடுத்து ஆடவந்த பஞ்சாப் அணி விஜய் (6 ரன்கள்), ஸ்டோ னிஸ் (0), வோரா (0) ஆகியோ ரின் விக்கெட்களை அடுத்தடுத்து இழந்தது. இதைத்தொடர்ந்து மேக்ஸ்வெல் தன்னந்தனியாக போராடி, பஞ்சாப் அணியை வெற் றிக்கு அருகே கொண்டுசென்றார். ஆனால் 42 பந்துகளில் 68 ரன்களை எடுத்து மேக்ஸ்வெல் அவுட் ஆனதும் ஆட்டத்தின் போக்கு திசை திரும்பியது.

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீச வந்த ரஸ் ஸல் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்தி, ஆட்ட நாயக னாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஸ்ஸல் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் அணி என் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்தது. எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதுவே எனக்கு சிறப்பாக செயல்பட ஊக்கத்தை வழங்கியது.

ஒரு பந்துவீச்சாளன் என்ற முறையில் சவாலான சூழ்நிலைகளில் பந்துவீசி எனது அணிக்கு வெற்றியை பெற்றுத்தர விரும்புகிறேன். பணிச்சுமையை நான் பெரிதும் நேசிக்கிறேன். என் பணி அத்தனை எளிதல்ல என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் கடைசிவரை போராடி அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தர விரும்புகிறேன். எங்கள் தலைமைப் பயிற்சியாளர் காலிசும், பந்துவீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரமும் எனக்கு மிகவும் உதவியாக உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in