

சென்னை: தோனியையும் தேஜஸ் ரயிலையும் ஒப்பிட்டு தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது.
ஐபிஎஸ் தொடரில் நேற்று சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே வீரர் தோனி கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். குறிப்பாக அவர் கடைசி 4 பந்துகளில் மட்டும் 16 ரன்கள் அடித்து தனது ஸ்டைலில் போட்டியை முடித்து வைத்தார். தோனியின் இந்த பினிஷிங் தொடர்பாக பலர் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு ரயில்வே தோனியையும் தேஜஸ் ரயிலையும் ஒப்பிட்ட தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது. அதில், "எங்களின் தேஜஸ் ரயிலின் வேகத்தை போன்று தோனி ஸ்டைலாக முடித்தார்" என்று கூறப்பட்டுள்ளது. தேஜஸ் ரயில் தமிழகத்தில் ஓடும் மிகவும் விரைவான ரயில் ஆகும். இந்த ரயில் மூலம் சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என்று குறிப்பிடத்தக்கது.